அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.

காலை 6.40 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

மதனகோபாலசுவாமி

தாயார்

பாமா, ருக்மணி

தல விருட்சம்

வாழை

ஆகமம்

வைகானசம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

மதுரை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.

ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.

கோயிலில் நுழைந்தவுடன் இடதுபக்கம் அரசமரத்தடியில் முழுமுதற்கடவுளாக விநாயகர் அமர்ந்திருக்கிறார். மூலவர் மதனகோபால சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூபக் கண்ணனாகப் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிசன்னதியிலும், ஆண்டாள் தனி சன்னதியிலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.

நவநீதகிருஷ்ணன், சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், உடையார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை இத்தலத்தில் நாம் தரிசிக்கலாம். கருவறையை கடக்கும் வழியில் இராமர் தனிசன்னதியில் காட்சி தருகிறார்.

மேலும் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹரி ஹர ஸர்ப்ப ராஜா, பஞ்ச முக ஆஞ்சநேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கின்றனர். குழலூதும் கண்ணன், இராமானுஜர் சன்னதியும் உண்டு.

திருவிழா:

இத்தக்கோயிலில் மாதம் தோறும் திருவிழா கொண்டாடப்படுகிறது, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு சிறப்பானவை.

கோரிக்கைகள்:

இசையில் நாட்டம் உடையவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வதால் இசை மேதை ஆகலாம் என்றும், இத்திருத்தலத்தில் அறுபதாம் கல்யாணம் செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

இங்குள்ள நாக தேவி, ஹரி ஹர ஸர்ப்ப ராஜா என அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் இராகு கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.

நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *