அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை திருக்கோயில், பெருநகர்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் உடனுறை பட்டுவதனாம்பிகை திருக்கோயில், பெருநகர் (அஞ்சல்), மானாம்பதி (வழி), உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 9655793042, 9444341202 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரம்மீசர்

உற்சவர்

சோமாஸ்கந்தர்

தாயார்

பட்டுவதனாம்பிகை

தல விருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பிரம்மநகர், சதுரானனம் சங்காரானனம், பிரம்மபுரம்

ஊர்

பெருநகர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1073ல் எடுப்பித்து விளக்கு வைத்து சென்றுள்ளான். இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் இராசராசனுடைய கல்வெட்டு தொன்மையானது, இங்குள்ள ஜேஷ்டா தேவியின் சிலை பல்லவர் காலத்தது. சம்புவரையனான ஆளப்பிறந்தான் வைகாசியில் விழா கொண்டாட, கைக்கோளரிடம் வரிவசூலித்தார். பங்குனியில் விழா எடுக்கவும் ஏற்பாடு செய்த செய்தி, அழகிய பல்லவன் கோன்நந்தி பன்மன் (கோப் பெருஞ்சிங்கன்) நன்மைக்காக, இக்கோயிலை கற்கோயிலாகக் கட்டித் திருமணமண்டபமும், இவ்வூரில் வாழ்ந்த வில்லி திருவன் திருகாந்தரான் எழுப்பினார் கி.பி.1626ல் கிராம மக்கள் 5 காணி நிலப்பரப்பில் பூந்தோட்டமும் இலுப்பைத் தோப்பும் வைக்க ஏற்பாடு செய்தனர். 1760ல் பிரமீசம் பதிற்றுப் பத்தந்தாதி எழுதிய கச்சியப்பர், ஊரின் செழிப்பை பின் வருமாறு புகழ்ந்துள்ளார்.

மறைசூழ் பிரமநகர் (94)

பலகாலும் ஏத்து விழவின் மிகுதிக்கண் நின்ற பிரமாபுரத்து தேவர் கூட்டங்கள் எவ்விடத்தும் நின்று பல முறையும் துதிக்கின்ற விழாக்கள் முகிதியிடத்து விளங்குகின்ற பிரமநகர் (27)

பிரமநகர் பிரமீசன் தனையிறைஞ்சியேத்தினார்கள் காந்து மணி முடிஇமையோர்க்கு இறைவராய்ப் பேரின்பம் கலந்து வாழ்வார் (3)

முடிஇமையோர்க்கு இறைவராய்ப் பேரின்பம் கலந்து வாழ்வார் (3)

உமாதேவி என்றும் தவம் செய்திருக்கும் காஞ்சி தலத்தின் எல்லைக்கண் விளங்குகின்ற தேவர் குழாம் மகிழ்ச்சி மிகுந்து வணங்கும் சதுரானன சங்கரம் எனும் பெயரைப் பெற்றுள்ள பிரமநகர் (2)

தைமாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் 14 நாட்கள் நடைபெறும் அதில் 5 ஆம் நாள் திருக்கல்யாணம், 7ஆம் நாள் திருத்தேர், 9ஆம் நாள் 63 நாயன்மார்கள் திருஉலா, 10ஆம் நாள் தைப்பூசத்தீர்த்தவாரி சிறப்புற நடைபெறுகின்றன, தைப்பூசத்தன்று சேயாற்றில் காஞ்சி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 கிராமங்களில் உள்ள கடவுள் திருமூர்த்திகள் ஒன்று கூடி அருள் பாலிக்கும் திருக்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திருஊரக வரதராஜப் பெருமாள் (தாயார் சன்னதிகள் தனித்தனியே) கோயில் ஊரின் நடுவில் அருள்பாலிக்கிறார். வடக்கே செல்லியம்மன். தெற்கு எல்லை பாதிரியம்மன், இடையில் தேவேந்திரன், பெரியாண்டவர், வீரபத்திரசுவாமி, நடுவில் மாரியம்மன், தென் கிழக்கே அங்காளம்மன், கிளரொளி அம்மன், வடமேற்கு தர்மராஜர் கோயில் போன்ற சன்னதிகள் பலருக்கு குலதெய்வமாகவும் ஊரின் காவல் தெய்வமாகவும் விளங்குகின்றன.

கணபதி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் பிரம்மீசனை வழிபட்ட தலம். ஜேஷ்டாதேவி, மகாபைரவன் ஆகிய கடவுள்களை பக்தர்கள் வழிபடும் சிறப்புத் தலம். பராசரர், பரத்வாஜர், பிருகு போன்ற முனிவர்களும் சோழஅரசனும் அணிசேகரப் பாண்டியனும் வழிபட்டு தைப்பூச நன்னாளில் இறைவனின் தரிசனம் பெற்றதாகத் தலபுரணம் கூறுகிறது.

பிரம்மா பூஜை செய்து நலம் பெற்ற தலம். பிரம்மா தனது சிரசை கிள்ளிய பைரவ சிவனுக்கு தனிச் சன்னதி வைத்து வழிபட்ட தலம். மிகத் தொன்மை வாய்ந்த கோயில். ஜேஷ்டா தேவி வழிபாடு, பைரவ வழிபாட்டுக்கு உகந்த தலம்.

ஊரின் வடகிழக்கே கோயில் உள்ளது. மதில்சூழ் 5 நிலை கொண்ட 7 கலசத்துடன் இராஜகோபுரம், தெற்கே நுழைவாயில், முதல் திருச்சுற்றில் சிம்மத்தூண் மண்டபத்தில் சக்கர வினாயகர், தொந்தி விநாயகர், அழகேசுவரர் திருக்குளம், தலத்தருவான வன்னி மரம், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் அலங்கார மண்டபம் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. மூன்று நிலையுள்ள ரிஷி கோபுரவாயில் நுழைந்து அடுத்த சுற்றினை அடையலாம். உள்ளே 6 படிகள் கடந்து சென்று மூலவரை வணங்கலாம். மகா மண்டபம், நவக்கிரக கோயிலை அடுத்து பலிபீடமும் சிங்க மண்டபமும் உள்ளன. தனிக்கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறாள். அன்னையின் திருப்பெயர் பட்டுவதனாம்பிகை. மண்டபத்தூண்களில் 12 விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். மூன்றாவது திருச்சுற்றில் அட்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சகன், கார்க்கோடன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர். நான்முகன், நந்தி தேவர், கொற்றவை, வல்லபவிநாயகர், ஏழு கன்னியர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், மகா கணபதி, ஆறுமுகக்கடவுள், தட்சிணாமூர்த்தி, திருமால் ஆகியோரை தரிசிக்கலாம், பிரசித்தி பெற்ற ஜேஷ்டாதேவி பிரகாரத்தில் அருள் பாலிக்கிறார். பச்சைக் கல்லாலான தூங்கானைமாடக் கோயிலான இக்கோயில் விமானத்தில் 3 கலசங்கள் கொண்டு அழகுடன் விளங்குகிறது. கோயிலின் உட்பிரகார ஈசான மூலையில் பச்சைக் கல்லில் ஆன மகாபைரவர் வாகனமின்றி தனித்தே காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.

திருவிழா:

தைமாதம் பிரமோற்சவம், தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம், சிவராத்திரி.

கோரிக்கைகள்:

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும் இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *