அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில், கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 97879- 06582, 04182- 245 304, 293 256 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பேசும் பெருமாள்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

கூழம்பந்தல்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

இந்தப் பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார். கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்து விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக, முதல்நாள் என்ன கிழமையில் செல்கிறோமோ, அதே கிழமையில் ஒன்பது வாரம் குழந்தையுடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கான தீர்த்தம் வீட்டில் வைத்து கொடுக்கவும் வழங்கப்படுகிறது.

மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் (கூடாரம்) கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. கூடாரத்தில், ஆண்டாள் நாச்சியார் சேவை சாதிக்கிறாள். அன்று திருப்பாவை பாடப்படும். திருமணத்தடை நிவர்த்தி, கல்வி, செல்வம், வியாபார அபிவிருத்திக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது. பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வந்து வரம் தருவார் வரதராஜன் என்று பக்தர்கள் உளமார நம்புகின்றனர். பேசும் பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, தாமரை மலர் கொண்ட திருக்கையுடைய கோலத்தில் உள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரையும், தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தையும் இணைத்து ஆட்சிபுரிந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். இவர்கள் இந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்தனர். ஸ்ரீ விஜயகண்ட கோபால மன்னர் கி.பி., 1270ல் கோயிலுக்கு வந்து பெருமாளிடம் பேசியதாக இரண்டு வாயிற்படி நிலைகளிலும் எழுதி வைத்துள்ளார்.

திருவிழா:

தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் (15 கிராமங்களின் கருடசேவை), திரு ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆங்கிலப்புத்தாண்டு, கூடாரவல்லி விழா, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ரதசப்தமி, மாசி மகம் (108கோ பூஜை), பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்), ஸ்ரீராமநவமி.

கோரிக்கைகள்:

பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

நேர்த்திக்கடன்:

தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *