அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம்

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 98413 63991 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல்10.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராஜகோபாலசுவாமி

உற்சவர்

இராஜகோபாலர்

தாயார்

செங்கமலவல்லி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

சதுர்வேதி மங்கலம்

ஊர்

மணிமங்கலம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருசேத்ர போரின்போது, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்து, பசுக்களை மேய்த்ததால் இவர், “இராஜகோபாலர்என்று பெயர் பெற்றார்.

சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருக்கிறார். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள்களையும் தரிசிக் கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார்.

இவரிடம் வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும், இராஜகோபாலருக்குத் துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது.

இராஜகோபாலர் கோயிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோயிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், “அஞ்சலி வரத ஆஞ்சநேயராககாட்சி தருகிறார். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையைப் பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவதுசிறப்பு. ஆஞ்ச நேயரின் மார்பில் இராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் இராமபிரானை வணங்கும் விதமாகக் கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும்; குரு மீதான மரியாதை அதிகரிக்கும். இவர் தவிர, கோயில் முன்மண்டபத்தில் ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக, ஆஞ்சநேயர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.

மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இராஜகோபாலர் நின்ற கோலத்தில் பத்ம விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இடது கையில் தண்டாயுதம் இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். இவருக்கான உற்சவர், வலது கையில் சக்கரம், இடக்கையில் சங்கு வைத்திருக்கிறார். சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின் மேலே, பள்ளி கொண்ட கோலத்தில் கிருஷ்ணரின் சிற்பம் இருக்கிறது. கிருஷ்ணருக்கான தலம் என்பதால், இவ்வாறு வடித்துள்ளனர். தாயார் செங்கமலவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஆண்டாளுக்கும் சன்னதி உண்டு. இராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் தலம், இவ்வூருக்கு அருகில் இருக்கிறது. இராமானுஜர், இங்கு வந்து இராஜகோபாலரை தரிசித்துச் சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

பெருமாள் சன்னதி சுற்று சுவரில் தெட்சிணாமூர்த்தி, நர்த்தன கிருஷ்ணர், நரசிம்மர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்களும் வடிக்கப்பட்டிருக்கிறது.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள்.

கோரிக்கைகள்:

கண்நோய் நீங்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு வஸ்திரம், துளசி மாலை அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *