அருள்மிகு சௌந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு

அருள்மிகு சௌந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 451-255 7232 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சவுந்தர்ராஜ பெருமாள்

தாயார்

சவுந்திரவல்லி

தல விருட்சம்

வில்வ மரம்

தீர்த்தம்

குடகனாறு நதி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தாளமாபுரி

ஊர்

தாடிக்கொம்பு

மாவட்டம்

திண்டுக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

மண்டூகம்என்ற சொல்லின் பொருள் தவளை.” ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் மண்டூக மகரிஷிஎனப் பெயர் பெற்றார். தன் சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டித் தவமிருந்தார். அப்போது, அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக் காக்கும்படி மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி, அசுரனை அழித்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். “சவுந்தரராஜர்என்றும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 500 வருடங்களுக்கு முன்பு விஜய நகர ஆட்சி வழி வந்த அட்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது. மதுரை அழகர்கோயிலுக் குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம்.

இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குத் தேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், இலட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.

இதை சிற்பக்கோயில்என்று சொல்லுமளவுக்கு பிரமாண்டமான கலைவண்ணங்களைக் காணலாம். தாயார் கல்யாண சவுந்திரவல்லி தனி சன்னதியில் இருக்கிறார். இவளது சன்னதி முகப்பில், நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி உள்ளனர். இச்சன்னதி முன் மண்டபம் சிற்பச் சிறப்பை வெளிப்படுத்தும் கலைக் கூடமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், இராமரைத் தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், இரதி, கார்த்தவீரியார்ஜூனன் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார். இவ்விழாவின் போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம் பாவனையாக நடக்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவவிமோசனம் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். ஆடி பவுர்ணமியன்று சுவாமி தேரில் எழுந்தருளுவார். பொருளாதாரச் சிக்கல் தீர சொர்ண ஆகஷ்ண பைரவர் அருள் தருகிறார்.

இங்குள்ள பிரகாரங்களில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்தன. நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம் இமைகள் என்று ஒவ்வொன்றும் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் சிற்பங்கள் இருக்கின்றன. மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் அமைந்த தலம்.

திருவிழா:

சித்திரைத் திருவிழா -5 நாள் திருவிழா.

ஆடிப் பவுர்ணமி பெருந்திருவிழா– 10 நாள் திருவிழா.

கோரிக்கைகள்;

பொருட்களை தொலைத்தவர்கள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணைய விரும்புபவர்கள் கார்த்தவீரியார்ஜூனருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். வியாழன் தோறும் ஆண்டாள் இம்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாள். அப்போது திருமணத் தடையுள்ளவர்கள் இவளுக்கு மஞ்சள்பொடி அபிஷேகம் செய்து, மன்மதன், இரதிக்கு மணமாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் விரைவில் நல்ல வரன் அமையும் என நம்புகிறார்கள்.

வெளிநாட்டு வரன்கள் வேண்டிக்கொண்டால் கூட அதே போல் வரன் அமைந்து விடுவதாக இக்கோயில் பக்தர்கள் அதிசயித்து கூறுகின்றனர்.

திருமண வரம் தவிர குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி ஆகியவைகளுக்காக இத்தலத்துக்கு பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன்:

தாயாருக்கு புடவை சாத்துதல், பெருமாளுக்கு துளசி மாலை அபிசேகம் ஆகியவை நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *