அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், மொண்டிபாளைம்
அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், மொண்டிபாளைம், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 – 4296 289 270 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வெங்கடேசப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
வெங்கட்ராமர் |
தாயார் |
– |
|
அலமேலுகங்கை |
தல விருட்சம் |
– |
|
ஊஞ்சல்மரம் |
தீர்த்தம் |
– |
|
தெப்பம் |
ஆகமம் |
– |
|
பாஞ்சராத்ரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மொண்டிபாளையம் |
மாவட்டம் |
– |
|
கோயம்புத்தூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பசுக்களை மேய்த்து வந்த சிறுவன் ஒருவன், புத்தி சுவாதீனம் இல்லாதவன் போன்று புலம்பிக் கொண்டும், தெய்வங்களை வணங்கிக்கொண்டும், அருகில் இருந்த குன்றின் மீது ஏறி குதித்துக்கொண்டும் இருந்தான். அவனது நடத்தையில் சுந்தேகமுற்ற அவனது பெற்றோர்களும், ஊர் மக்களும் சேர்ந்து ஒர் நாள் காலையில் அவன் வசித்த பசுக்கொட்டகையில் மறைந்து கொண்டு கண்காணித்தனர். அப்போது, அவன் நான்கு சுமை புளிய விறகுகளை நெருப்பில் கொளுத்தி எரிந்த பின் அதனை தனது கையில் அள்ளி வாழை இலையில் வைத்து அருகில் இருந்த ஒர் கிணற்றில் மிதக்கவிட்டு அதன் மீது அமர்ந்து திருப்பதியை நினைத்து மந்திரங்களைக் கூறியபடி சுவாமியை பூஜித்தான். இக்காட்சியைக் கண்ட அவர்கள் சிறுவனின் வடிவில் வந்திருப்பது வெங்கடாஜலபதி என்பதையறிந்து அவனை வணங்கி கோயில் எழுப்ப உத்தரவு கேட்டனர்.
அப்போது அவன் நான்கு ஒட்டர்களை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓடிச்சென்று ஓரிடத்தில் மண்ணை அப்பறப்படுத்தி குழி தோண்டச் செய்தான். பின் அவன் அக்குழியில் இறங்கி அங்கே இருந்த பாறையை ஓங்கி அடித்தான். அப்பாறை இரண்டாகப்பிளக்க, அதன் கீழ் பூமணல் நிறைந்திருந்த குழி இருந்தது. அதன் கீழ் தேவர்களால் பூஜிக்கப்பட்ட சாளகிராம சிலை, சங்கு மற்றும் தாமிரக்கிண்ணம் இருந்தது. அதனை அப்படியே எடுத்து அருகில் இருந்த ஊஞ்சமரத்தின் கீழ் வைத்தனர். அதன் பின்பு தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தது.
சில காலம் கழித்து ஒர் முறை அச்சிறுவன் வடிவில் மீண்டும் வந்த வெங்கடாஜலபதி, அவ்வூருக்கு வடக்கே உள்ள காயல்பட்டினம் எனும் ஊரில் வடக்கே நீண்டிருக்கும் புளியமரத்தின் கொம்பின் கீழ் ஒரு கொப்பரை தனம் இருப்பதாகவும் அதை எடுத்து வந்து தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினான். அதன்படி அதனை எடுத்து இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதியில் நடைபெறும் முறைகள் போன்று பூஜைகள் நடக்கிறது. சுவாமிக்கு இடது புறத்தில் திருப்பாதம் அமைந்துள்ளது. இங்கு சுவாமியை வணங்க வருபவர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்கு, பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைசாறு ஆகிய மூலிகை பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. இது தேகத்தில் தோன்றும் வெண்குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. ஊஞ்சல்மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இவ்வூர் ஊஞ்சல்வனம் எனவும், வெங்கடேசர் குடிகொண்டிருந்த இடமாதலால் ஸ்ரீநிவாசபுரம் எனவும் வேறு பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள வெங்கடேசர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு வைணவத்தலங்களில் காண முடியாத சிறப்பாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்குச் சென்ற துர்வாச முனிவர் இங்கு வீற்றிருக்கும் வெங்கடேசரை வழிபட்டு சென்று பின்பு மோட்சம் அடைந்துள்ளார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளே இவ்விடத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகக் கருதப்படுவதால், திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நிறைவேற்றுகின்றனர். இதனால் இத்தலம் “மேலத்திருப்பதி” என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப் படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே, இங்கு செல்லவேண்டுமெனில் இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்தே செல்ல வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல் நைவேத்யமாக வழங்கப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஏகதள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். வடகிழக்கே சனீஸ்வரபகவான் தனது காக வாகனத்தில் தனியே அமர்ந்தும், வலது முகப்பில் கிழக்கு நோக்கியபடி சக்கரத்தாழ்வார் நின்ற கோலத்தில் சக்கரவடிவிலும், வீர ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடியும் காட்சி தருகின்றனர். சுற்றுப் பிரகாரத்தில் வேணுகோபால், ஆழ்வார்கள், மஹாலட்சுமி, ஆண்டாள், வைகுண்ட நாராயணமூர்த்தி ஆகியோர் அமைந்துள்ளனர்.
திருவிழா:
தை மாதத்தில் 10 நாள், மார்கழியில் 11 நாள் பிரம்மோற்சவம் பிரதான திருவிழாவாகும். விஜயதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி மற்றும் புரட்டாசி சனிக்கிழமை.
கோரிக்கைகள்:
வெங்கடேசரை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குடும்பம் மற்றும் தொழில் விருத்தியடையும், பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும். மல்லிப்பொட்டினை நெற்றியில் இட்டுக்கொள்ள நோய்கள் தீரும் என நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு தளிகை நைவேத்யம் படைத்து அஷ்டோத்ர அர்ச்சனைகள் செய்து விசேஷ திருமஞ்சனம், சுதர்சன ஹோமம், திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்படுகிறது.
Leave a Reply