அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சித்திவிநாயகர், கருமாரியம்மன் கோயில், பெரியசேக்காடு, மணலி சென்னை.

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அருணாச்சலேஸ்வரர்
அம்மன் உண்ணாமுலை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெரியசேக்காடு
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சித்தி விநாயகரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயில். மகனை தனியே விட மனதில்லாமல் சில வருடங்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் என்ற திருப்பெயர்களில் மகனது அருகிலேயே தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர் அம்மையும், அப்பனும்.

இங்குள்ள கருமாரி அம்மன் தனி சன்னதியில் நாகக்குடையின் கீழ் காட்சி தருகிறார். இவளது திருபாதங்களுக்கு கீழ் ரேணுகா பரமேஸ்வரியின் சிரசு உருவம் அமைந்துள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும், ஆடி மாதமும் கருமாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடிப்பூரத்தன்று பெண்கள் ஒன்று சேர்ந்து கருமாரியம்மன் மடியில் பச்சைப்பயிறு கட்டி, வளையல் அணிவித்து ஐந்து வகை சாதங்களை படைத்து வளைகாப்பு நடத்துகின்றனர். சித்ரா பவுர்ணமியன்று 501 பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் செய்தும், 108 தீச்சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். மூலவர் சித்திவிநாயகருக்கு இடப்புறம் அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது.

பெரிய ஆவுடையாரில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவனுக்கு உகந்த நாட்களில் 108 சங்காபிஷேகம், விபூதிக்காப்பு, சந்தன காப்பு என பல்வேறு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அருணாசலேஸ்வரர் சன்னதிக்கு எதிரே தெற்கு நோக்கி தனி சன்னதியில் உண்ணாமுலையம்மன் தரிசனம் தருகிறாள். நவகிரக தோஷங்கள் நீங்க இங்குள்ள நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதானை நடக்கின்றது.

அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், தேவி கருமாரி, கௌமாரியம்மன், வைஷ்ணவி, விஷ்ணு துர்க்கை, நர்த்தன விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள அருணாசலேஸ்வரர் பெரிய ஆவுடையாரில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.

திருவிழா:

சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, ஆடி அமாவாசை, சித்ரா பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.

கோரிக்கைகள்:

வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள விநாயகரையும், விரைவில் திருமணம் நடைபெற கருமாரி அம்மனையும் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு தேங்காய் மாலை, அருகம்புல் மாலை அணிவித்தும், அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *