அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் கோயில், மேற்கு சைதாப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள் கோயில், மேற்கு சைதாப்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.

+91- 93811 63501 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்ன வெங்கடேச நரசிம்மர்
உற்சவர் வெங்கடேச நரசிம்மர்
தாயார் அலர்மேல்மங்கை
தீர்த்தம் ரகு தீர்த்தம்
ஆகமம் வைகானசம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் ரகுநாதபுரம்
ஊர் மேற்கு சைதாப்பேட்டை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, இத்தலத்தில் சிறியளவில் இருந்த கோயிலில், கோதண்டராமர் சன்னதி மட்டும் இருந்தது. ஒருசமயம் இராமரை வழிபட்டு வந்த பக்தர் ஒருவரின் கனவில் பிரசன்னமாகிய (தோன்றிய) வெங்கடேசப் பெருமாள், தனக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்பின், இங்கு வெங்கடேசருக்கு கோயில் எழுப்பப்பட்டது. பக்தரின் மனதில் பிரசன்னமாகி, அதன்பின் எழுப்பப்பட்ட கோயில் என்பதால் சுவாமி, “பிரசன்ன வெங்கடேசர்என்று பெயர் பெற்றார். இங்கு சுவாமியை பிரதிஷ்டை செய்தபோது, அழகிய சிங்கர் (நரசிம்மர்) விக்ரகத்தையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். எனவே கோயில், “பிரசன்ன வெங்கடேச நரசிம்மப் பெருமாள்கோயில் என்று அழைக்கப்பெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுவாமி, முகத்தில் வடுக்களுடன் காட்சி தருகிறார். இதைப்போலவே இத்தலத்திலுள்ள தாயார் உற்சவரின் முகத்திலும் வடுக்கள்இருக்கிறது. இக்கோயிலில் பிரசன்ன வெங்கடேசருக்கு சன்னதி அமைத்தபோது, தற்போது தாயார் சன்னதி இருக்குமிடத்தில் ஒரு புற்று இருந்தது. அந்த புற்றின் உள்ளே தாயாரின் விக்ரகம் இருந்ததைக் கண்டறிந்த பக்தர்கள், அச்சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்து, சன்னதி எழுப்பி, தாயாருக்கு கல் விக்ரகமும் அமைத்தனர். மண்ணில் இருந்து கிடைக்கப்பெற்ற சிலை என்பதால், இவள் முகத்தில் வடுக்களுடன் காட்சி தருகிறாள். பங்குனி உத்திரத்தன்று, சுவாமி இவளது சன்னதிக்கு எழுந்தருளி திருமணம் செய்து கொள்கிறார்.

கோயில் முன்மண்டபத்தில், இராமர் சன்னதி தெற்கு நோக்கியிருக்கிறது. மூலவர் இராமர் வலப்புறம் சீதை, இடப்புறத்தில் இலட்சுமணருடன் திருமணக்கோலத்திலும், உற்சவர் வலப்புறம் இலட்சுமணர், இடப்புறத்தில் சீதையுடன் பட்டாபிஷேக கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு ஒரே நேரத்தில் இங்கு இராமபிரானின் இரண்டு கோலங்களைத் தரிசிக்கலாம். புனர்பூச நட்சத்திர நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, உள் பிரகாரத்தில் புறப்பாடாகிறார். இராமநவமி விழா இவருக்கு 10 நாட்கள் எடுக்கப்படுகிறது. நவமியன்று சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கும். இவரது சன்னதி எதிரில், ஆஞ்சநேயர் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார். முன்பு இங்கு இராமர் மட்டும் இருந்ததால் தலம், “ரகுநாதபுரம்” (ரகு என்றால் ராமனைக் குறிக்கும்) என்று அழைக்கப்பெற்றது. தை மாதத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியும், ஆனி மாதத்தில் ஒருநாள் மயிலாப்பூர் ஆதிகேசவரும் இக்கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். சேனைமுதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் முன்மண்டபத்தில் உள்ளனர். பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறது.

இங்குள்ள விமானம் ஆனந்த விமானம். கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர், சிம்ம முகம் இல்லாமல், சுயரூபத்துடன் சாந்தமான முகத்துடன் இருக்கிறார். எனவே இவர், “அழகிய சிங்கர்என்றழைக்கப்படுகிறார். வெங்கடேசருக்கு பூஜை செய்தபின்பு, இவருக்கு பூஜை நடக்கிறது.

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆவணியில் அன்னக்கோடி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.

ஆவணி மாத திருவோணத்தன்று இங்கு, “அன்னகோடிஉற்சவம் நடக்கிறது. அன்று சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உற்சவரை எழுந்தருளச்செய்து, அவர் முன்பு அன்னத்தை மலைபோல குவித்து வைத்து படைக்கிறார்கள். பின்பு அதையே பிரசாதமாகத் தருகின்றனர். இந்த விழாவின்போது சுவாமிக்கு, கோவர்த்தனகிரியை கையில் பிடித்தபடி, கோவர்த்தனன் அலங்காரம் செய்யப்படும். கோயில்களில் பிரார்த்தனை செய்பவர்கள், சன்னதி முன்பாக தரையிலோ அல்லது அங்குள்ள பலகையிலோ நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், அலர்மேல்மங்கை தாயார் சன்னதி முன்பு நெல் பரப்பி அதில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

கோரிக்கைகள்:

இத்தலத்தில் தாயார் அலர்மேலுமங்கை வரப்பிரசாதியாக அருளுகிறார். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

தாயாரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் திருமஞ்சனம் செய்துவைத்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *