அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை
அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை-625 001.
********************************************************************************************
மதுரைமாவட்டம்.
********************
+91- 98655 82272
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – செல்லத்தம்மன், கண்ணகி
தல விருட்சம்: – வில்வம், அரசு
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – மதுரையம்பதி
ஊர்: – மதுரை
மாநிலம்: – தமிழ்நாடு
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையிலுள்ள மாதரி என்பவளின் வீட்டில் அடைக்கலமாக தங்கச் செய்தாள். கண்ணகியின் கணவன் கோவலன், மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் ஊருக்குள் சென்றான்.
இவ்வேளையில், அவ்வூரை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்த அரண்மனை பொற்கொல்லன், அந்தப் பழியை கோவலன் மீது போட்டான். இதை தீர விசாரிக்காத பாண்டியன், கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டார்.
கணவனை இழந்த கண்ணகி கோபத்துடன் பாண்டியன் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாள்.
தவறை உணர்ந்த மன்னனும், ராணியும் அக்கணமே உயிர்விட்டனர். பிற்காலத்தில் கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளைத் தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். செண்பகப்பாண்டியன் காலத்தில் இது அம்மன் கோயிலாகி விட்டது.
இத்தலவிநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் துர்க்கை, மீனாட்சி சுந்தரேசுவரர், அய்யனார், காலபைரவர் ஆகியோர் இருக்கின்றனர். முன் மண்டப தூண்களில் அட்ட(8) காளி சிற்பங்கள் உள்ளன.
பிரதான அம்பிகை:
இக்கோயில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோயில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. கண்ணகியின் சிலை உக்கிரமாக இருந்ததால் இவ்வாறு நடப்பதாக மக்கள் நம்பினர். மன்னன் செண்பக பாண்டியன் இதுபற்றி ஆலோசித்தான்.
சிவபெருமானே அவனது கனவில், அவ்விடத்தில் தனது தேவி பார்வதியின் சிலையை அமைக்கச் சொன்னதாகச் சொல்வதுண்டு. அதன்படி மன்னன், இங்கு அம்பாளைப் பிரதிட்டை செய்து, அவளையே பிரதானமாக்கி கோயிலை மாற்றியமைத்தான். மன்னன் பெயரால், “செண்பகத்தம்மன்” என்றழைக்கப்பட்ட இவளது பெயர் காலப்போக்கில் “செல்லத்தம்மன்” என மருவியதாகவும் சொல்கின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு செல்லத்தம்மனே பிரதானமாகி விட்டாள். இவளுக்கு பூசை முடிந்த பின்பே, கண்ணகிக்கு பூசை நடக்கும்.
பஞ்சால் திரிக்கப்பட்ட மாலை:
வைகையின் தென்கரையில் அமைந்த இக்கோயிலில், ஒரு அசுரனை வதம் செய்த கோலத்தில் செல்லத்தம்மன் காட்சி தருகிறாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள். எதிரில் பேச்சியம்மன் இருக்கிறாள். செல்லத்தம்மன் உற்சவ அம்பிகைக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. முன்மண்டபத்தில் கண்ணகி, கையில் சிலம்புடன் காட்சி தருகிறாள். அருகில் அவளுக்கு ஆதரவு கொடுத்த மாதரி இருக்கிறாள். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து பெண்கள் வழிபடுகிறார்கள்.
ராகு, கேது தோடம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராசருக்குப் பால், மஞ்சள் அபிஷேகம் செய்து, பஞ்சால் திரிக்கப்பட்ட மாலையின் மீது குங்குமம் தடவி அணிவிக்கிறார்கள்.
திருக்கல்யாண விழா:
இக்கோயிலில் தை பிரம்மோத்சவத்தின்போது, சிவன், அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கும். திருக்கல்யாணத்தன்று அம்பிகை, மீனாட்சியம்மன் கோயில், சிவன் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவாள். சிவன் சன்னதியில் இருந்து பட்டு சேலை எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அணிவிப்பர். பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படும். மறுநாள் இவள் திருமணப்பட்டுடன் தேரில் எழுந்தருளுவாள்.
திருவிழா:
தை மாதம் பிரம்மோத்சவம், தை, ஆடி வெள்ளி, நவராத்திரி.
கோரிக்கை:
கோப குணம் குறைய, கணவன் மீதான பாசம் அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நாக தோட நிவர்த்திக்கு பிரகாரத்திலுள்ள நாகராசரை வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்பிகைக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.
Leave a Reply