அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91-44-2746 4325 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வீரபத்திரர்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

அனுமந்தபுரம்

மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சந்திரன் தன் மனைவியரைக் கவனிக்காத காரணத்தால் பெற்ற சாபத்தினால் தனது தொழிலைச் சரிவர செய்ய இயலாமல் போனது. இதையறிந்த தேவர்கள் சிவனிடம் வேண்டி மீண்டும் சந்திரனின் இயக்கம் நடைபெற அருள்பெற்றார்கள். இதனால் கோபம் கொண்ட சந்திரனின் மாமனார் தட்சன் சிவனை அவமதித்தான். புலஹ முனிவர் தட்சனை சாந்தம் செய்தார். இருந்தும் தட்சன் திருந்தவில்லை. எனவே முனிவர் தட்சனின் யாகம் அழியட்டும் என சாபம் கொடுத்து சென்றார். தட்சன் விஷ்ணுவை முன் நிறுத்தி யாகத்தை தொடங்கினான். இதனால் பல துர்சகுனங்கள் தோன்றின. வருத்தமடைந்த நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் நடந்தவைகளைக் கூறினார். சிவனும் தட்சனிடம் அவிர்பாகம் பெற்று வர நந்தியை அனுப்பினார். தட்சன் நந்தியை அவமானப்படுத்த, அவரும் தட்சனுக்கு சாபம் கொடுத்து கைலாயம் திரும்பினார். இப்படியே அனைவரும் சாபம் கொடுத்தால் தன் தந்தையின் நிலைமை என்னாவது என்று தவித்த பார்வதி தன் கணவன் பரமேஸ்வரனிடம், தட்சனிடம் தான் சென்று அவிர்பாகம் பெற்று வர சம்மதம் கேட்டாள். சிவன் தடுத்தும் கேளாமல் தான் மட்டும் வந்து அவிர்பாகம் கேட்டு அவமானப்பட்டாள்.

தந்தையென்றும் பாராமல் தட்சனுக்கு சாபம் கொடுத்து விட்டாள். கயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து அகோர வீரபத்திரர்தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள். அகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், “நீங்கள் இருவரும் தட்சனிடம் அவிர்ப் பாகம் கேளுங்கள். தராவிட்டால் அவனை அழித்துவிடுங்கள்என உத்தரவிட்டார். சிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம் கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப் படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து அமைதியாக இருந்தனர். கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க, பத்ரகாளி பெண்களைத் தாக்கினாள். தட்சனோ சாகாவரம் பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத்தில் போய் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை. சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, “தெற்கேயுள்ள அனுமந்தபுரத்தில் வெற்றிலைத் தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார்.

இத்தலத்திற்கு அருகில் காமாட்சி அம்மன் திருக்கோயில், ஆட்சீஸ்வரர் திருக்கோயில், கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், சத்யநாதசுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

வேண்டுகோள்:

செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், உடல் நிலையில் கோளாறு உடையவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி வந்து எதிரில் உள்ள குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வேண்டி கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் வெற்றிலை மாலை சார்த்தி, முடிகாணிக்கை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *