அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி கோயில், பழங்காநத்தம்

அருள்மிகு அக்னி வீரபத்திரசுவாமி கோயில், வசந்த நகர் பஸ் ஸ்டாப் அருகில், பழங்காநத்தம், மதுரை, மதுரை மாவட்டம்.

+91- 452- 4376 395, 94430 55395

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அக்னி வீரபத்திரர்
தல விருட்சம் வில்வம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பழங்காநத்தம், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டிய மன்னனுக்கு குழந்தையில்லை. அவனது மனைவி காஞ்சனமாலை பார்வதியின் பக்தை ஆவாள். அவளுக்கு அருள் செய்வதற்காக மீனாட்சி என்ற பெயரில் அம்பிகை அவர்கள் இல்லத்தில் அவதரித்தாள். உலகையே வென்ற மீனாட்சி, கைலாயத்தில் சிவனைக் கண்டாள். தனது மணாளன் அவரே என உணர்ந்தாள். அவளை மணந்து கொள்வதற்காக சிவன், கைலாயத்திலிருந்து மதுரை வந்தார். அனைத்து தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் மதுரைக்கு வந்து விட்டனர். தனது திருமணத்திற்கு பாதுகாப்பாக முனீஸ்வரர், ஜடாமுனி போன்ற காவல் தெய்வங்களை சிவபெருமான் திசைக்கு ஒருவராக நிறுத்தி வைத்தார். தென்திசைக்கு தனது அம்சமான வீரபத்திரரை நிறுத்தினார். பிற்காலத்தில் கர்நாடகாவில் வசித்த வீரபத்திரர் பக்தர்கள் சிலர், மதுரை வந்தனர். அவர்கள், இவ்விடத்தில் அக்னி வீரபத்திரர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.

நிலத்தகராறு, விளைச்சல் குறைவு, பாதியில் கட்டடப்பணியை நிறுத்தி வைத்திருப்பவர்கள் தங்கள் பிரச்னை தீர இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செவ்வாய் கிரகம் நிலத்திற்கு அதிபதி என்பதால், செவ்வாய் கிழமைகளில் தங்களது நிலத்தில் இருந்து சிறிது மண்ணை எடுத்து வந்து, வீரபத்திரரின் பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். பின்பு அந்த மண்ணையே பிரசாதமாகப் பெற்றுச் சென்று, தங்கள் நிலத்தில் சேர்த்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. சுவாமியை வேண்டிப் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கேசரி நைவேத்யம் படைத்து, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வில்வ மாலை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள், இவரையே குலதெய்வமாக பாவித்து வழிபடுகிறார்கள். வில்வம் இத்தலத்தின் விருட்சமாகும். அளவில் சிறிய இக்கோயிலில், அம்பாள் சன்னதி கிடையாது. சுவாமி எதிரில் நந்தி, முன்மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர், நாகர் ஆகியோர் மட்டும் இருக்கின்றனர். பிரதோஷ வேளையில் நந்திக்கு விசேஷ பூஜை நடக்கிறது. செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமிகளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 6 கால பூஜை உண்டு. வீரபத்திரர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இந்த அமைப்பை, “ருத்ரபாலகர்என்பர். மார்பில் உருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். வீரபத்திரரின் அருகில் ஆட்டுத்தலையுடன் வணங்கிய நிலையில் இருக்கும் தட்சனைக் காண முடியும். இத்தலத்தில், காலுக்குக் கீழே தட்சனை சம்ஹாரம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். வீரபத்திரர் கையிலுள்ள சூலம் தட்சனின் கழுத்தில் பாய்ந்தநிலையில், உயிர்ப்புடன் இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தனது ஒரு கையில் தட்சன் நடத்திய யாகத்தில் அவிர்பாகம் பெற்ற தேவர் ஒருவரை பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் யாகத்தில் பயன்பட்ட மணியை வைத்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் வீரபத்திரரை தரிசிப்பது அபூர்வம்.

திருவிழா:

சிவராத்திரி, பவுர்ணமிதோறும் விசேஷ பூஜை.

வேண்டுகோள்:

திருமண தோஷம் நீங்க, இடம் தொடர்பான பிரச்னைகள் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வெற்றிலை மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *