அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை
அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காலபைரவர் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கல்லுக்குறிக்கை | |
மாவட்டம் | – | கிருஷ்ணகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல்பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.
சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணித் தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன.
பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் காலபைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு. கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர்.
கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் இரம்மியமான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார். இங்கு காலபைரவர் சிலைகள் இரண்டும் உள்ளன. நுழைவு வாயிலில் நந்தி இருக்கிறது.
திருவிழா:
ஞாயிற்றுகிழமை இராகுகாலத்திலும், தேய்பிறை அஷ்டமியிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர்.
வேண்டுகோள்:
நோய்கள், வறுமை, துன்பம் நீங்கி நன்மை உண்டாகவும், திருமணம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும், எதிரி பயம் இல்லாதிருக்க வேண்டியும் பைரவரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பைரவருக்கு பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply