அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர்

அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர் – 680664, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-481-231 2737

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் பகவதி அம்மன்

பழமை – 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர் குமாரநல்லலூர்

மாவட்டம் கோட்டயம்

மாநிலம் கேரளா

பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிட்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை நீரில் மூழ்க வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.

அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. “அதை 41 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவீர்என பூசாரி சாந்திதுவிஜனுக்கு மதுரை மன்னன் உத்தரவிட்டான்.

ஆனால், பூசாரியால் அதைக் கண்டுபிடிக்கவில்லை. 41வது நாள் கவலையுடன் மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார். அப்போது அசரீரி தோன்றி,”இங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுஎன்றது.

கண்விழித்த பூசாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, அதன்பின் அவர் மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்தபடி சென்றார். இந்த பயணம் மதுரையைக் கடந்து கேரளாவைத் தொட்டது.

குமாரநல்லூரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கருவறையில் அந்த ஒளி ஐக்கியமானது. அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிட்டைக்குரிய பூசைகள் நடந்து கொண்டிருந்தன.

பிரதிட்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில்,”குமரன் அல்ல ஊரில்” (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது. இதனால் கலங்கிப்போன மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதிக்கு சிலை பிரதிட்டையை முடித்து விட்டு அதன் பின் இங்கு வரலாம் என்று நினைத்து கொண்டு வைக்கம் நோக்கி சென்றான்.

வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. முடிவாக குமாரநல்லூரில் பிரதிட்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் வைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிட்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து, பரசுராமரால் வேதகிரி மலையில் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. பிரதிட்டை செய்யும் நேரம் நெருங்கியது.

அப்போது அதிசயத்தக்கவகையில், காவி உடை மற்றும் சடைமுடி கோலத்துடன் ஒரு சன்னியாசி கருவறையில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிட்டை செய்து விட்டு திடீரென மாயமானார். இவர் பரசுராமர் என தல புராணம் கூறுகிறது.

மதுரையிலிருந்து தெய்வீக ஒளியால் அழைத்து வரப்பட்ட சாந்திதுவிஜன் கோயில் பூசாரியானார். இவரது வாரிசுகள் இன்றும் கோயில் அருகே தங்கியிருந்து பூசைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

2ஆயிரத்து400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை திருத்தலங்களில் முக்கியமானதுமான இக்கோயிலில் நுழைந்தாலே பக்தர்களின் துயரம் தூர விலகி விடுகிறது.

கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

இத்தலத்திற்கு அருகில் அற்புத நாராயணன் திருக்கோயில், மகாதேவர் திருக்கோயில், மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில், கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், சுப்ரமணியர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.

கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகையன்று மதியம் ஆறாட்டு பூஜை நடக்கிறது. இந்த பூசையைக்காண திருச்சூரிலிருந்து வடக்குநாதரே வருகை தருவதாக ஐதீகம். விழா நாட்களில் பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்படும். இது தவிர, நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிட்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூசை செய்யப்படுகிறது.

நீண்டகாலம் திருமணத்தில் தடைஉள்ளவர்கள் இத்தலத்தில் சுயம்வர புஷ்பாஞ்சலிஎன்ற பூஜை நடத்தினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால் மஞ்சள் நீராட்டுமுக்கிய வழிபாடு. குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

குடும்பத்தில் பிரச்னை நீங்கி, தம்பதிகளின் ஒற்றுமையான வாழ்க்கைக்காக அம்மனுக்கு பட்டு, தாலி சாத்தப்படுகிறது. அம்மனின் பரிபூரண அருள் வேண்டி கோயில் நடையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *