அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், கோபி, ஈரோடு மாவட்டம்.

+91-4285-321854, 94427 09596

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோபி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

கோபி ஐயப்பன் கோயிலில் ஈஸ்வரனும், முருகனும் எதிரெதிரே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கிருக்கும் மஞ்சள் மாதா சன்னதி பிரபலமானது. இந்த கோயிலில் வாய் பேச முடியாதவர்களுக்காக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, அவர்கள் நலனுக்காக வேண்டப்படுகிறது. கோயிலினுள் நுழைந்ததும் இடது, வலது பக்கங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரு சன்னதிகள் அமைந்துள்ளன. இதனையடுத்து ஐயப்பசுவாமி மண்டபம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுமார் மூன்றாயிரம் பக்தர்களுக்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு வழிநடத்தி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இருமுடிகட்டும் மண்டபத்திற்கு அருகே நாகராஜர் சன்னதியும், கோயிலின் மையப்பகுதியில் ஐயப்பன் சன்னதியும், அதனருகே விசாலாட்சி சமேத காசி விஸ்வநாத பரமேஸ்வரர் சன்னதியும், இதற்கு நேர் எதிரே பாலமுருகன் சன்னதியும், அருகில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. பரமேஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் பாலமுருகன் ஈஸ்வரனின் நேரடி அருளை பெற்று பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வழங்கி வருகிறார்.

ஐயப்பனை திருமணம் செய்து கொள்ளத் தவம் கிடந்து காத்து, பக்தர்களுக்கு அருளும் மஞ்சள் மாதா சன்னதி, பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள வீணா தட்சிணாமூர்த்தி அடுத்ததாக கோபி ஐயப்பன் கோயிலிலும் வீற்றிருந்து வியாழன்தோறும் பக்தர்களை காத்து அருளுகின்றார். இடதுபுறம் சிவதுர்க்கையும், சண்டிகேஸ்வரரும், கால பைரவரும் பக்தர்களை காக்கின்றனர்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் முதலில் இடம் பெற்றிருப்பவர் சத்தி விநாயகர். பின் பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளும், தும்பிக்கை ஆழ்வாரும், ஆஞ்சநேயரும், கருடாழ்வாரும் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

வேண்டுகோள்:

வாய் பேச முடியாதவர்களுக்கு பேசவைக்கும் திறனை வளம்படுத்தவும், தீராத நோய்களை தீர்க்கவும், தினமும் மூன்று கால நெய் அபிஷேக பூஜைகள் ஐயப்பனுக்கு செய்யப்படுகிறது.

அபிஷேகம் செய்யப்பட்ட நெய்திவ்யம் பக்தர்களுக்கு அருமருந்தாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மன அமைதியும், தீராத நோய்களும் தீர வழிவகை கிடைக்கிறது.

நேர்த்திக்கடன்:

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *