அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா

அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 484 – 228 4167 (மாற்றங்களுக்குட்பட்டது)

தினமும் இக்கோயில் திறக்கப்படாது. சபரிமலையில் நடை திறக்கும் மாதபூஜை உள்ளிட்ட நாட்களில் மட்டும், காலை 5 – 1 மணி, மாலை 5 – 8 மணி வரை நடை திறந்திருக்கும். பங்குனி உத்திரத்தன்று நடை திறக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கும் அனுமதி உண்டு.

மூலவர் ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல்
தீர்த்தம் பூர்ணாநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மஞ்ஜப்புரா, காலடி
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

ஐயப்பனின் தந்தையான பந்தளராஜாவுக்கு உதயணன் என்ற திருடனால் தொந்தரவு இருந்தது. உதயணன் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இதனால் பந்தள மகாராஜா தன் மகன் ஐயப்பனிடம் இதுபற்றி சொன்னார். ஐயப்பன் உதயணனை அழிக்கச்சென்ற போது, அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு ராஜாக்கள் தங்கள் படையுடன் அவருக்கு உதவியாக சென்றனர். அன்றுமுதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்பனின் நெருங்கிய நண்பர் களாயினர். இதன் பிறகு ஐயப்பன், மகிஷியை அழிக்க பூமிக்கு வந்த தன் கடமை முடிந்து விட்டதால், சபரிமலைக்குப் புறப்பட்டார். தான் செல்லும் முன் எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து மாளிகா குடும்பத்தினரிடம் விளக்கினார். உடனே அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் எருமேலி வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைத்தனர். இதுவே பெரிய பாதைஎனப்படுகிறது. இதன்பிறகு, ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சாஸ்தா சிலையில், ஐயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமாகி விட்டார்.

அன்றிலிருந்து ஆண்டு தோறும் பெரியபாதை வழியாக அம்பலப்புழா குடும்பத்தினரே முதலில் சபரிமலை செல்கின்றனர். அடுத்ததாக அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் செல்வர். அத்துடன் பெரியபாதையில் திருவாபரணப்பெட்டி செல்லும் போது அம்பலப்புழா குடும்பத்தினர் வழி ஏற்படுத்தி கொடுக்க, அம்பாடத்து மாளிகை குடும்பத்தினர் திருவாபரணப்பெட்டியுடன் செல்கின்றனர். அம்பாடத்து மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் ஆண்டுதோறும் சபரிமலை சென்று வந்தார். வயதான காரணத்தினால் அவர் சபரிமலை செல்ல சிரமப்பட்டார். ஒருமுறை இவர் சிரமப்பட்டு மலையேறும் போது, அந்தணர் ஒருவருடன் ஓரிடத்தில் தங்க நேர்ந்தது. அவர் கேசவன் பிள்ளையிடம் ஒரு வெள்ளிமுத்திரையுடன் கூடிய தடி, விபூதிப்பை மற்றும் ஒரு கல் ஆகியவற்றை கொடுத்து விட்டு, “இதோ வருகிறேன்எனக் கூறி சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை. கேசவன் பிள்ளை ஐயப்பனை தரிசித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது, அந்த அந்தணர் அவரை சந்தித்து, “நான் கொடுத்த மூன்று பொருள்களையும் பூஜித்து வாருங்கள்எனக் கூறிவிட்டு மாயமாகி விட்டார். அந்தணராக வந்தது ஐயப்பனே என இவர்கள் கருதுகின்றனர். அன்று முதல் அம்பாடத்துமாளிகா குடும்பத்தினர் கோயில் ஒன்றை கட்டி, மூலஸ்தானத்தில் இந்த மூன்று பொருள்களையும் வைத்து, அவற்றை ஐயப்பனாக கருதிப் பூஜித்து வருகின்றனர்.

பங்குனி உத்திரத்தில் சிவ, விஷ்ணுவின் புதல்வராக தர்மசாஸ்தா அவதரித்தார். சாஸ்தாவின் அவதாரமே ஐயப்பன் என்பதால் பங்குனி உத்திரத்தன்று நடை திறக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கும் அனுமதி உண்டு.

திருவிழா:

சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலின்படி, விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை

தீராத நோய்கள், திருமணத்தடை, அனைத்து வித பிரச்னைகளும் தீர இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இருப்பிடம் :

எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள காலடி சென்று அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் மஞ்ஜப்புரா அம்பாடத்து மாளிகா கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *