அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 94434 94473, 94430 02731 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி 7 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாஸ்தா
தல விருட்சம் வில்வ மரம்
தீர்த்தம் யாக குண்ட தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சுசீந்திரம்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ, கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா” (அஞ்சனம் என்றால் கண், கண்டன் என்பது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன்) என்று பெயர் பெற்றார்.

அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசூயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்துக்கு அறிவித்து, அவளைப் போல பெண்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர். அனுசூயா அவர்களை சாப்பிட அழைத்தாள். நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசூயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தாள். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தாள். மூவரும் குழந்தைகளாயினர். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசூயா, அத்திரிக்குக் காட்சி தந்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம், “ஆஸ்ரமம்என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இக்கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்கிறார்கள்.

சிவனுக்குரிய வில்வமே இத்தலத்தில் விருட்சம். இங்குள்ள மூன்று வில்வ மரங்களில் 3 இலை, 5 இலை, 9 இலை என வெவ்வேறான எண்ணிக்கையில் கிளை விடுவது சிறப்பு.

புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது.
பிரகாரத்தில் மாடன் தம்பிரான், பூதத்தார், ஈனன், வன்னியர் ஆகிய தெய்வங்கள் இருக்கின்றனர். பொதுவாக சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தா இல்லை. எதிரில் யானை, குதிரை வாகனங்கள் உள்ளன.

திருவிழா:

பங்குனி உத்திரத்தை ஒட்டி இவருக்கு வரும் 7, 8ல் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

வேண்டுகோள்:

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் சாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *