அருள்மிகு பகவதியம்மன் கோயில், செங்கன்னூர்
அருள்மிகு பகவதியம்மன் கோயில், *********************************************************
செங்கன்னூர், கேரள மாநிலம்
************************************************
கேரள மாநிலம் செங்கன்னூரில் வீற்றிருக்கும் பகவதியம்மன் உருவத்துக்கு சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போல மாத விலக்கு ஏற்படுகிறது. அதிசயம்தான். அற்புதம்தான். அறிவுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுதான். எங்குமே கேள்விப்படாத விஷயம்தான். மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்தான். நம்ப முடியாதுதான். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். காலம் காலமாய் நடந்து வரும் நிகழ்ச்சி இது.
செங்கன்னூர் பகவதியின் வரலாறு: **************************************************** பார்வதியாம் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனைத் தவிற அனைவரையும் அழைத்தான். இது கேட்ட தாட்சாயணி அதிர்ச்சியுற்று சினம் மிகக் கொண்டாள். யாகத்தைத் தடுப்பதற்காக இறைவனிடம் சென்று தந்தை வீடு செல்ல அனுமதி கேட்டாள். இறைவனோ பின்னர் வரும் விளைவுகளை மனதில் கொண்டு அனுமதி தர மறுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. “அவமானப்படப் போகிறாய்” என்னும் எச்சரிக்கையையும் மீறி இறைவனின் அனுமதியின்றி யாகம் நடக்குமிடம் சென்ற தாட்சாயணியை அலட்சியப்படுத்தினான் தட்சன்.
“கணவனை ஏன் அழைக்கவில்லை?” என்று வினவினாள் தாட்சாயணி. அதற்குத் தட்சன், ”அழைக்கவேண்டியவர்களை அழைத்துவிட்டேன். யாரை அழைக்கவேண்டும், யாரை விலக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். புனிதமானவர்களைத்தான் நான் அழைப்பேன். சுடுகாட்டிலே, மண்டை ஓடுகளுடன் வசித்துக்கொண்டு, பிணங்களுக்கு மத்தியில் அரைகுறை ஆடையுடன் உலாவும் ஆட்களையெல்லாம் நான் அழைக்க வேண்டிய அவசியமில்லை. குழப்பம் ஏற்படுத்தாமல் மரியாதையாக வெளியில் போ” என்று அவமதித்தான். தாட்சாயணி அதிர்ச்சியுற்றாள். எல்லோர் முன்னிலையிலும் இப்படி ஓர் அவமானத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. கொதித்தெழுந்தாள். தாட்சனைப் பார்த்து தாட்சாயணி,”மூடனே, இந்த வினாடியிலிருந்து உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அறுந்து போயிற்று. உன்னால் உண்டாக்கப்பட்ட என்னுடைய இந்த உடல், எனக்கு இனி தேவையில்லை. சுடுகாட்டிலே நடனமாடுவதால் என் கணவரை நீ அழைக்கவில்லையா? முப்பத்து முக்கோடி தேவர்கள் கூடியிருக்கும் இந்த யாகம் செய்யும் இடமும் ஒரு சுடுகாடாக மாறட்டும். அதுவும் என்னுடைய பிணம் எரியும் சுடுகாடாக ஆகட்டும்” என்று கூறி அங்குள்ள யாககுண்டத்தில் குதித்துவிட்டாள். நடந்தது கண்டார் சிவபெருமான். சினமுற்றார். நேராக யாக சாலைக்கு வந்தார். தீயிலே கருகிக் கொண்டிருந்தாள் தாட்சாயணி. அவரிடமிருந்த உக்ர சக்தி, யாகசாலையைச் சிதற அடித்தது. எல்லோரும் கதி கலங்கினார்கள். அந்த இடம் ரணகளமானது. சிவனின் சீற்றம் அதிகரித்தது. தண்டமாய் உட்கார்ந்து கொண்டிருந்த தட்சனின் தலையை ஒரு கிள்ளுக் கிள்ளி, அந்த குண்டத்திலேயே வீசினார். தட்சனைக் கொன்றும் சிவனின் சீற்றம் தணியவில்லை. தீயில் சாம்பலாகிக் கொண்டிருந்த தாட்சாயணியின் உடலைத் தூக்கிக் கொண்டு பித்துப் பிடித்தவர் போல் ஆனார். தாட்சாயணியின் உடலைத் தாங்கியபடியே ஊழிக்கூத்தாட ஆரம்பித்தார். தேவர்கள் எல்லாம் நடுங்கினார்கள். சிவனின் உருத்ர தாண்டவத்தால் உலகமே அழிந்துவிடும் நிலைமை. திருமாலிடம் முறையிட்டனர்.
தாட்சாயணியின் உடலை இந்த தேசமெங்கும் பிரிந்து போகுமாறு செய்ய வேண்டும். பூமியெங்கும் அது விழுந்தால், அங்கெல்லாம் மகாசக்தியின் சக்தி ஓங்கி விடும். சிவன் சாந்தமாகி விடுவார் என்பதை உணர்ந்த பெருமாள், தன் சக்கர ஆயுதத்தை ஏவினார்.
சிவன் ஆடிக்கொண்டு செல்லுமிடமெல்லாம் சக்கரம் பின் தொடர்ந்து சென்றது. தாட்சாயணியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றது.
அவ்வாறு, பார்வதியின் உடல் பாகங்கள் இந்த பாரத தேசமெங்கும் 108 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களெல்லாம் சக்திபீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அம்பிகையின் உடலில் மத்திய கண்டம் விழுந்த இடம் செங்குன்று என்று அழைக்கப்பட்டது. இப்போது செங்கன்னூர் என்று அழைக்கப்படுகிறது. திருப்பூத்து என்று அழைக்கப்படும் மாதவிலக்கு செங்கன்னூர் பகவதிக்கு ஏற்படும் காரணம் இதனால்தான்.
அந்த மூன்று நாட்களும், பகவதி கருவறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படுகிறாள். வடக்குப் பிராகாரத்தில் ஒரு மூலையில் உள்ள அறையில் வைக்கப்படுகிறாள். அந்த நாட்களில் வேதனை தெரியாமல் இருக்க நிறைய மலர்களால் அலங்கரிக்கப்படுகிறாள். அந்த மூன்று நாட்களும் பக்தர்கள் அலையலையாய் வந்து தரிசிக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள்.
நான்காவது நாள் காலையில், பகவதி குளிப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவளுக்கு எண்ணெய் முழுக்காட்டு செய்யப்படுகிறது. வாசனை திரவியங்கள் பூசப்படுகின்றன.
பின்னர் கோயிலுக்கு வருகிறாள் பகவதி. சுவாமியும் வருகிறார். சுவாமியைப் பார்த்ததும் வெட்கப்படுவது போல, பகவதி அவர் அருகில் போய் நிற்கிறாள். பின்னர் பிராகாரத்தைச் சுற்றிவிட்டு தன் கருவறைக்குள் நுழைகிறாள் பகவதி.
பகவதி, வீட்டு விலக்காகும் இந்த வைபவத்தை “திருப்பூத்து” என்று மரியாதையாக அழைக்கிறார்கள். அந்த நாட்களில் பகவதி கட்டியிருந்த புடவையை, பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் அலுவலகத்திலே வைக்கிறார்கள். அந்த வெள்ளைப் புடவையிலே திட்டுத் திட்டாக அந்த அடையாளங்கள் இருக்கின்றன. அதைப் பார்ப்பதற்கு பெரும் கூட்டம் பயபக்தியுடன் கூடுகிறது.
அந்தப் புடவையை வீட்டிலே வைத்துக் கொண்டால் அந்த வீட்டிற்கு எல்லா நலனும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால் அதை விலைக்கு வாங்கிக் கொள்ள கடும் போட்டி இருக்கிறது. முன் பதிவு அடிப்படையில் அதை அளிக்கிறார்கள். முன்பெல்லாம் மாதா மாதம் நடந்து வந்த அந்த திருப்பூத்து வைபவம், இப்போது 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை நடப்பதாகச் சொல்கிறார்கள். செங்கன்னூர் என்றாலே பகவதியின் பெயர்தான் நினைவுக்கு வருகிறது என்றாலும், இது ஒரு பெரிய சிவன் கோயில்தான். மகாதேவ சேத்திரம் என்றும் சொல்கிறார்கள். முகப்பே பிரும்மாண்டமானதோர் அரண்மனையை நினைவூட்டுகிறது. பளிச்சென்று அத்தனை சுத்தமாக இருக்கிறது.
சிவபெருமான் இங்கே லிங்க உருவில் இருந்தாலும், வெள்ளிக் காப்புகளால் தலையில் பிறையுடன் முகவடிவில் அலங்கரித்திருப்பது அற்புதமாக இருக்கிறது. நம்மிடம் ஏதோ பேச முயல்வது போல் ஒரு தொனிப்பு. சிவபெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்க, பகவதி மேற்குப் பார்த்த சன்னதியில் வீற்றிருக்கிறாள். சண்டிகேஸ்வரரும் லிங்க வடிவிலேயே இங்கே தரிசனம் தருகிறார்.
பிராகாரங்களில் விளக்கேந்திய அழகிய பெண் சிலைகள் தூணுக்குத் தூண் நிற்கின்றன. மாலை வேளைகளில் அதில் விளக்கு ஏற்றுகிறார்கள். ஏதோ தேவலோகத்துப் பெண்கள் நேரில் வந்து விட்டது போல் உள்ளது.
கோவிலின் மேற்குப்புற வாசல் சுவரில் ஒரு சிறு பொந்து இருக்கிறது. யாராவது இருவருக்குள் பிரச்னை என்றால், “செங்கன்னூர் பகவதி சாட்சியாக நான் உண்மை சொல்கிறேன்” என்று சத்தியம் செய்து விட்டு, அந்தப் பொந்துக்குள் கையை நுழைப்பார்களாம். அதனுள் நச்சுப் பாம்புகள் நிறைய இருப்பதாக நம்பிக்கை. பொய் சொன்னவர்களை அவை தீண்டிக் கொன்று விடும் என்பதால் பொய்யர்கள், உண்மையைச் சொல்லி விடுவார்களாம்.
கும்ப பரணியன்று செங்கன்னூர் ஆலயத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் இங்கே கூடுகிறார்கள். தேரிலே ஒரு மகாராணி போல பகவதி எழுந்தருளுகிறாள். விழா முடிவில் தேர் சுற்றுப்புற கிராமங்களுக்கெல்லாம் செல்கிறது.
Leave a Reply