அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வாடிப்பட்டி

அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.

காலை 6-8 மணி, மாலை 4-7 மணி வரை திறந்திருக்கும்.

சாஸ்தாவின் அவதாரம் என்று கூறப்படும் அய்யனார், வாடிப்பட்டியில் அருள் செய்கிறார். இவர் முதலில் காட்சி தந்தது கவுசிக வம்சத்தை சேர்ந்த பிருத்யும்ய ராஜாவுக்குத்தான்.

ஒருமுறை இவர் வேட்டைக்கு சென்றபோது தாகத்திற்கு நீர் கிடைக்கவில்லை. “ஊனான்எனப்படும் கொடியை வெட்டினால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதை வெட்டினார். பலமுறை முயற்சித்தும் கொடி அறுபடவில்லை. கொடி எங்கிருந்து முளைத்து வருகிறது என அறிவதற்காக அதைத் தொடர்ந்து சென்றபோது, ஒரு இலிங்கத்தின் அடிப்புறத்தில் இருந்து வெளிவந்தது தெரியவந்தது. கொடியைப் பலம் கொண்டமட்டும் இழுக்க, கொடி வேரோடு வெளி வந்தது. வேரில் பாதுகை (செருப்பு) செண்டி மற்றும் பிரம்பு இருந்தது. ராஜா திகைத்தார். அப்போது ஜடா முடியுடன் அய்யனார், ராஜா முன் காட்சி அளித்தார்.

முதலில் அய்யனாரை தரிசித்தவர் பிருத்யும்யராஜா என்பதால் அய்யனார் கோயில் அமையும் இடங்களில் எல்லாம் ராஜாவை 1ம் பந்தி தெய்வமாகவும்(பரிவாரமூர்த்தி) தூசி மாடன், அக்னி வீரபத்திரர், அங்காள பரமேஸ்வரி, வீரபாகு, முருகப்பெருமான், கருப்பணசுவாமி, இருளாண்டி, முனீஸ்வரன், அக்னிதேவன், இந்திரன், தர்மதேவன், சோணை, சப்பாணி, பத்ரகாளி, வள்ளி, ராக்காயி (லட்சுமி), மூக்கையன்(கருடன்), சந்திரன், மீனாட்சி, சதாசிவம்(சிவன்)ஆகியோரை 21 பந்தி தெய்வங்களாகவும் வணங்குகின்றனர். இவை ஒவ்வொன்றிற்கும் மூன்று துணை தெய்வங்கள் உள்ளவாறும், உதாரணமாக 1ம் பந்தி பிருத்யும்யராஜாவிற்கு துணை தெய்வங்களாக சம்புவராயர், மலினி மார்த்தாண்டர், பூபதி விக்ரம பாண்டியன் எனவும், வீரபாகுவுக்கு கிரவுஞ்சன், மயூரன், துவஜன் ஆகியோரும் ஆக 63 துணை தெய்வங்களை அய்யனார் கோயில்களில் பிரதிஷ்டை செய்தனர். சிவாலயங்களில் 63 நாயன்மார் போல் இது அமைகிறது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை குலசேகர பாண்டியன் ஆட்சி செய்த போது இந்தக் கோயில் கட்டப்பட்டது. அப்போது மதுரையின் மேற்கு எல்லையாக இருந்த வாடிப்பட்டியில் தனது படைப்பிரிவு ஒன்றை மன்னர் நிறுத்தியிருந்தார். அந்த படைக்குத் தளபதியாக இருந்தவர் முதுகுளத்தூரை சேர்ந்த மகாபத்மராஜன். இவர் தலைமையில் மேட்டுநீரேத்தான் என்ற இடத்தில் படையினர் தங்கியிருந்தனர். அங்கு நான்கு கோட்டைகள் இருந்தன. இவர்கள் தங்கள் வழிபாட்டிற்காக நீரேத்தான் கண்மாய்க் கரையில் அய்யனார் கோயிலை நிர்மாணித்தனர். காலப்போக்கில் அய்யனார் கோயில் சிதைந்தது. தற்போது இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது.

மேலும் 21 பந்தி தெய்வங்கள், 63 துணை தெய்வங்களின் சிலைகள் அமைய உள்ளன. மகாபத்மராஜன் வழி வந்தவர்களும், ஆந்திராவில் இருந்து வந்தவர்களும் அய்யனாரையும், சோணை சுவாமியையும் தங்கள் இஷ்ட தெய்வங்களாக வணங்கி வருகின்றனர். புரட்டாசி மாதம் இரு பிரிவினரும் இணைந்து 2 நாட்கள் விழா நடத்தி

வருகின்றனர்.

இருப்பிடம்: மதுரையில் இருந்து 28 கி.மீ., தூரத்திலுள்ள வாடிப்பட்டிக்குச் சென்று, அங்கிருந்து மேட்டுநீரேத்தான் செல்லும் மினிபஸ்களில் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *