அருள்மிகு ஐயனார் திருக்கோயில், திருநாரையூர்

அருள்மிகு ஐயனார் திருக்கோயில், திருநாரையூர், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயனார்
அம்மன் பூரணை, புஷ்கலை
தல விருட்சம் வேப்பமரம், ஆலமரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருநாரையூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஐயனார் வழிபாடு பிரபலம் அடைந்து விட்டது. தமிழகத்தில் தொன்மையான ஊர்களில் வடக்கில் பிடாரியும், தெற்கில் ஐயனாரும் கோயில் கொண்டுள்ளனர். ஐயனார் என்பவர் பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காதலால் உருவான கடவுளாவார். கையனார் என்ற சொல்லே பிற்காலத்தில் ஐயனார் ஆயிற்று என்றும் கூறுவர். மிகவும் புகழ் பெற்ற தலமான திருநாரையூரில் எழுந்தருளியுள்ள ஐயனாரும் புகழ், பெருமைக்குரிய கடவுளாவார். தெய்வ அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் திருஅவதாரத் தலம் திருநாரையூர் ஆகும். ஒருமுறை நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இவ்வூரைக் கடந்து மாலை வேளையில் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்பகுதி அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. அச்சமயம் அவளுக்குப் பிரசவ வலி வந்துவிடவே துணைக்கு யாரும் இன்றித் தவித்திருக்கிறாள். அப்பொழுது ஐயனார் ஒரு பெண்ணாகத் தோற்றம் பெற்று நல்ல முறையில் குழந்தை பிறக்கச் செய்தார். பின் இரவு முழுவதும் அவளுக்கு துணையாக இருந்து விட்டு விடிந்தவுடன் மறைந்து விட்டார். அதன்பிறகுதான், தனக்குத் தாயாக வந்து பிரசவத்திற்கு உதவியவர் ஐயனார் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. இதன் அடிப்படையில் ஐயனாருக்கு இங்கு கோயில் கட்டி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

அப்பரடிகள் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு வரும் அன்பர்கள் ஐயனார் கோயிலுக்கும் வந்து செல்வது மரபாகும். நம்பியாண்டார் நம்பிகள் வழிபாடு செய்த பொல்லாப்பிள்ளையார் இக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார். தற்போது உள்ள மூலவரின் காலம் 17-ம் நூற்றாண்டு ஆகும். ஐயனாரின் பழைய சிலை 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் தனிபீடத்தில் மூலவர் ஐயனார் தனது தேவியருடன் காட்சி தருகிறார். பழைய மூலவரின் சிற்பம் பின்னமாகி விட்டதால், அதனை தனி மேடையமைத்து, பக்கத்தில் வைத்துள்ளார். தற்போது வழிபாட்டில் உள்ள ஐயனார் சிற்பம் பழைய சிற்பத்தைப் போலவே சற்று பெரிதாக அமைந்துள்ளது. ஐயனார் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து சுக ஆசனத்தில் அமர்ந்த நிலையில், வலது கையில் சாட்டையைப் பிடித்த வண்ணம் உள்ளார். இடது கையை இடது முழங்கால் மீது வைத்துள்ள நிலை. தலையில் ஜடாபாரமும், காதுகளில் பத்ர குண்டலமும், மார்பில் மூன்று ஆரங்களும் அணிந்துள்ளார். ஐயனாரின் வலது பக்கம் அவரது தேவியான பூரணை அமர்ந்துள்ளார். தலையில் கரண்ட மகுடமும், இடது கையில் பூச்செண்டு பிடித்தும், வலது கையை தொடை மீது வைத்தும் அமர்ந்துள்ளாள். இடது பக்கம் புஷ்கலை அமர்ந்துள்ளாள். இவர் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். வலது கையில் மலர்ச் செண்டு ஏந்தி இடது கையை இடது காலில் ஊன்றியுள்ளார். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் மகர குண்டலங்கள், மார்பில் மணிமாலைகள் அணிந்துள்ளார். வீரனாருக்கு ஐயனார் கோயிலின் முன்பாக கிழக்கில் தனிச் சன்னதி அமைந்துள்ளது. ஊரை பார்த்தபடி வீரனார் காட்சி தருகின்றார். அவரது ஆயுதமான சூலம் எதிரே மூன்றடி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீரனார் தனிமேடையில் இரண்டடி உயரத்தில் நின்ற நிலையில் காட்சி தருகின்றார். தலையில் அமைந்த விரிசடையைக் கொண்டையாக சேர்த்துக் கட்டியுள்ளார். காதுகளில் பத்ர குண்டலமும், மார்பில் ஆரங்களும், கால்களில் வீரக்கழல்களும் அணி செய்கின்றன. வலது கையில் குறுவாளும், இடது கையில் கதாயுதத்தையும் பிடித்துள்ளார். குதிரை வாகனத்தில் அமர்ந்து ஊரை வலம் வந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார் இவர் என்பர். விநாயகர் தனி மேடையில் அமர்ந்து காட்சி தருகின்றார். கோயிலுக்கு கிழக்கே தனித்தனி மேடைகளில் மிகப் பிரமாண்டமான உருவத்தில் எதிர்எதிராக இரண்டு குதிரைகள் நின்ற நிலையில் காட்சி தருகின்றன. குதிரையின் நடு முதுகில் ஐயனாரும், வீரனும் அமர்ந்து செல்வதற்காக மெத்தை விரிப்பு தொங்கவிடப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கில் பலிபீடத்தின் தென்புறமாக தல விருட்சமான வேப்பமரம் காட்சி தருகின்றது. வீரன் சன்னதிக்குப் பின்புறம் மற்றொரு தலவிருட்சமான ஆலமரம் அமைந்துள்ளது. தெற்குப் பக்கத்தில் திருக்குளம் அமைந்துள்ளது, கோயில் திருக்குளம் தெளிந்த நீரோடையைப் போல் காட்சி தருகின்றது. வடக்குக் கரையில் இரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இத்திருக்குளத்தில் நீராடி ஐயனாரை வலம் வந்து வழிபாடு செய்வது மரபாக உள்ளது. ஒவ்வொரு ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையன்றும், தைப் பொங்கலன்றும், தமிழ் வருடப்பிறப்பு நாட்களிலும் குலதெய்வ வழிபாட்டுக்காரர்களும், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் திரளான பக்தர்களும் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, கோயிலில் பொங்கலிட்டு மகிழ்கின்றனர். ஐயனார் கோயிலின் தலவிருட்சம், சிற்பங்களின் அமைப்பு, கட்டடத்தின் கலையம்சம் போன்றவற்றை பார்க்கும் போது, இக்கோயிலின் காலம் ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வருகிறது. ஆனால் அதற்கும் முன்பாகவே சோழ மன்னர்கள் காலத்தில் ஆலமரம் அல்லது வேப்பமரத்தடியில் சுடுமண் உருவத்தில் ஐயனார் இங்கு வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்கின்றனர். 15-ஆம் நூற்றாண்டில் ஓட்டுக் கட்டடத்தில் கற்சிற்பங்களைக் கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். பிறகு 17- ஆம் நூற்றாண்டில் கருங்கல் மற்றும் செங்கல் கதை கொண்டு மூலவர் கருவறையும் முன்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அருள்பாலித்து வருகிறார். தன் பக்தர்கள் யாரும் வாழ்வில் இன்னல்பட்டு முடங்கிப் போகாமல் காத்து வருவதால் இந்த ஐயனாருக்கு மங்காமல் காத்த ஐயனார் என்று சிறப்புப் பெயரும் உண்டு.

திருவிழா:

ஒவ்வொரு ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை, தைப்பொங்கல்.

வேண்டுகோள்:

வேண்டுதல்கள் நிறைவேறவும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீரவும் இங்குள்ள ஐயனாரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்தும், பொங்கல் படைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *