அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர்

அருள்மிகு கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 480-280 3061.

காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – பகவதி அம்மன்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – கொடுங்கலூர்

மாவட்டம்: – திருச்சூர்

மாநிலம்: – கேரளா

சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வப் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் நடனமங்கை மாதவியின்பால் ஈர்க்கப்பட்டுத் தன் செல்வங்களை இழந்து மிகவும் இன்னலுறுகிறான். சொத்துக்களை இழந்த அவன், கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது, அச்சிலம்பும் மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, இவன் மேல் திருடன் எனும் பழி விழுகிறது. கோவலன் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசவைக்குச் சென்று தன் கணவன் கள்வனல்ல என் நிரூபிக்கிறாள். பின் மன்னனை சபிக்கிறாள். சினம் தாங்காது மதுரையை எரித்து விடுகிறாள். பின்னரும் அடங்காச் சினத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாகக் கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்குத்தான். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் இயந்திரம் நிறுவி அம்மனை சாந்த சொரூபி ஆக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது.

கோயில் அமைப்பு:

எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம், ஆறடி உயரம், வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள்பாலிக்கிறாள். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை வரிக்க பிலாவுஎன்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரணமாகவே முழுக்காட்டு செய்வதில்லை. “சாந்தாட்டம்என்ற சிறப்பு முழுக்காட்டு மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் கருவறையாக் கருதி இதற்கும் சிறப்பு பூசை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். கோயில் நுழைவு வாயிலில் வாயில்காப்போர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.

தைமாதம் 1 முதல் 4ம் தேதிவரை தாழப்புலிஎன்ற விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமங்கலிப் பெண்கள் எண்ணை, குங்குமம், மஞ்சள், மலர் இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூசை செய்யப்படுகிறது.

அம்மை நோய் கண்டவர்கள் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். கண்திருட்டியால் பாதிக்கப் பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

துலாபார வழிபாடுஇங்கு சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்கிறார்கள்.

கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு முழுக்காட்டு செய்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *