அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், மாரியப்பா நகர், சென்னிமலை

அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், மாரியப்பா நகர், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மாரியப்பா நகர், சென்னிமலை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர் தங்கிய இடம் பிற்காலத்தில் ஒரு பாறையாக வளர்ந்து உள்ளது. அப்படிப் பாறையாக உள்ள இடத்தில்தான் செல்வ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மக்கள் ஆஞ்சநேயர் சிலையை குன்றின் மேல் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். இங்குள்ள ஐம்பொன்னாலான மூலவர் ஆஞ்சநேயர் சிலைக்கு அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள். வாயு மகன் ஆஞ்சநேயருக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளது. அங்கு எல்லாம் ஆஞ்சநேயருக்கு பிரம்மாண்ட அளவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. அவைகள் அனைத்தும் கற்சிலைகள்தான். ஆனால் செல்வ ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலை (மூலவர்) ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடிஉயரத்தில் 650 கிலோ எடையில் இந்த ஐம்பொன் சிலையை அமைத்துள்ளார்கள்.

வாயு பகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் நன்மகனாய் தோன்றிய அனுமனின் பெருமை சொல்லிலும், ஏட்டிலும் அடங்காது. இராமபிரானுக்கு தன்னைத்தானே அடிமையாக்கிக் கொண்டு அளவிடற்கரிய பேராற்றல் பெற்றவர் ஆஞ்சநேயர். அனுமனை வழிபட்டு எல்லா நன்மைகளையும் பக்தர்கள் பெற்று வருகிறார்கள். தன்னை வழிபடுவோர்க்கெல்லாம் அனைத்து நலன்களையும் வழங்கி அருள்பாலித்து வருகிறார் இந்த ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வழிபடத் தொடங்கிய மக்கள் சகல செல்வங்களும் கிடைக்கப்பெற்றனர்.

ஆஞ்சநேயருக்கு பெரிய அளவில் கோயில் அமைத்து வழிபட விரும்பிய மக்கள் செல்வ ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது போல் ரூ.10 லட்சம் செலவில் இந்த கோயிலை அமைத்துள்ளனர்.

திருவிழா:

ஸ்ரீராம நவமி, மாதம்தோறும் தமிழ்மாதம் முதல் தேதி அன்று இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வேண்டுகோள்:

நிலைத்த செல்வம், நீடித்த ஆயுள், நோயற்ற வாழ்வு வேண்டியும், விரைவில் திருமணம் கைகூடவும் இத்தல ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, ஸ்ரீராமஜெய மாலை அணிவித்தும் வெண்ணெய், செந்தூரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *