அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், நாமக்கல், நாமக்கல் மாவட்டம்.

+91- 4286 – 233 999, 94438 26099

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் நாமக்கல்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

ஒருசமயம் கண்டகி நதியில் (நேபாளத்தில் உள்ளது) ஆஞ்சநேயர் நீராடியபோது, ஒரு சாளக்ராமம் (திருமாலின் வடிவமாக கருதப்படும் புனிதமான கல்) கிடைத்தது. அதை பூஜைக்காக எடுத்துக்கொண்டு வான் வழியே பறந்து வந்தார். இத்தலத்தில் நீராடுவதற்காக இறங்கிய அவர், கமல தீர்த்தத்தைக் கண்டார். சாளக்ராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வதென யோசித்த வேளையில், தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவமிருப்பதைக் கண்டார். அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும், அந்த வடிவத்தைக் காணத்தான் தவமிருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர், அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்துவிடுவேன் என இலட்சுமி நிபந்தனை விதித்தாள். ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது. தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர், சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில், நரசிம்மர் தோன்றி, தாயாருக்கு அருள் செய்தார். இவர் லட்சுமி நரசிம்மர்எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

குடவறை சிற்பமாக உள்ள இலட்சுமி நரசிம்மர் கூரிய நகங்களுடன் இருக்கிறார். இரணியனை சம்காரம் செய்ததன் அடையாளமாக உள்ளங்கையில் இரத்தக் கறையுடன் காட்சி தருவது கலியுக அதிசயம். அருகில் சனகர், சனாதனர், சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா உள்ளனர். நரசிம்மர் குடவறை மூர்த்தி என்பதால், திருமஞ்சனம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம் நடக்கிறது.

நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்தால், “இலட்சுமி நரசிம்மர்என்றழைக்கப் படுவார். ஆனால், இலட்சுமி இவரது மடியில் இல்லாமல், மார்பில் இருக்கிறாள். நாமகிரித் தாயார் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவளை வணங்கிட, கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை. சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோயில் எதிரே தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

இச்சன்னதியின் பக்கவாட்டு சுவர்களிலுள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை. இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

பங்குனியில் 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர், தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே சுவாமி, தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கிறது.

வேண்டுகோள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *