யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், திருவண்ணாமலை

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.

+91 4175 237 567, 94875 83557

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் யோகி ராம்சுரத்குமார்
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் திருவண்ணாமலை
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

சிலர் வெளிமுகமாகவும், இன்னும் சிலர் உள்முகமாகவும் இறையனுபவம் பெறுகின்றனர். அதோ, அந்த தூணுக்கு கீழே நிற்கிறாரே, அவர் உள்முகமாக இறையனுபவம் பெற்றவர். அவர் உண்மையானவர்” – இப்படி அந்த மகான் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார் என்று யோகி ராம்சுரத்குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருசமயம் காஞ்சிமகாபெரியவரை சந்திக்கச் சென்று, கூட்டத்தின் கடைசியில் ஒரு ஓரமாக நின்றிருந்தபோதுதான், பெரியவர் இப்படிச் சொல்லி அவரை அழைத்தார். கங்கை கரையில் நர்த்தரா என்ற ஊரில் வசித்த ராம்தத்குன்வர், குஸும்தேவி தம்பதியினருக்கு, 1918 டிசம்பர் 1ல் பிறந்தவர் ராம்சுரத்குன்வர். “இராமன் மீது அன்புள்ள குழந்தைஎன்பது இதன் பொருள். இவர் சிறு வயதில் ஒரு குருவி மீது விளையாட்டாக கயிறை வீச, அது கயிறின் பாரம் தாங்காமல் உயிரை விட்டது. இந்த சம்பவம் ராம்சுரத்குமாரைப் பெரிதும் பாதித்தது. பிறப்பு, இறப்பு பற்றி சிந்தித்தவர், விடைதேடி காசி சென்றார். பின், குருவின் மூலமாக இறையனுபவம் பெற விரும்பியவர், திருவண்ணாமலையில் இரமணர், புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்தார். அதன்பின், கேரளாவில் பப்பாராம்தாஸ் சுவாமியிடம் சென்றார். அவர், “ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதை இடைவிடாமல் உச்சரித்தவர் புதிதாகப் பிறந்ததைப் போல் உணர்ந்தார். பல தலங்களுக்கும் யாத்திரை சென்றவர், 1959ல் திருவண்ணாமலை வந்தார். யோகிராம்சுரத்குமார் என்று அறியப்பட்டவர், தன்னை பிச்சைக்காரன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். கையில் ஒரு கொட்டாங்குச்சி (தேங்காய் சிரட்டை) மற்றும் விசிறி வைத்துக் கொண்டதால் விசிறி சாமியார்என்றே அழைக்கப்பட்டார்.

18 ஆண்டுகள் கிரிவலப் பாதையிலும், ரோட்டோரத்திலும், இரயில்வே ஸ்டேஷனிலுமாக தங்கியவர், பக்தர்களின் விருப்பத்திற்காக இங்கு தாமரை வடிவில் ஆசிரமம் கட்டினார். தினமும் மூன்று வேளையும் இங்கு அன்னதானம் நடக்கிறது. முகப்பில் பிரமிடு வடிவ வரவேற்பு மண்டம் உள்ளது. ஆசிரமத்தில் யோகிராம்சுரத்குமார் முக்தி பெற்ற இடத்தில் ஒரு இலிங்கமும், முன் மண்டபத்தில் உயிரோட்டத்துடன் தத்ரூபமாக வடிக்கப்பட்ட மூன்று சிலைகளும் உள்ளன. இதற்கு பின்புறம் அவர் சித்தியடைந்த இடத்தில், அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளன. இங்குள்ள வேதபாடசாலையில் இராம்சுரத்குமாரின் உயிர் பிரியும் நிலையில், இத்தாலியில் செய்யப்பட்ட மார்பிள் சிலையும் உள்ளது. “பெயரைச் சொன்னால் நீங்கள் திரும்புவதைப்போல, இறைவனும் அவர் பெயரைச் சொல்லும்போது திரும்பிப் பார்க்கிறார். ஆகவே, இறைவனாகிய அப்பாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுங்கள். உங்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றி வைப்பார். இதற்காக தனியே பிரார்த்தனை செய்யத் தேவையில்லைஎன அருளாசி வழங்கிய யோகி ராம்சுரத்குமார், மாசி மாதம் தேய்பிறை துவாதசி நாளில் முக்தியடைந்தார்.

இவரது ஆசிரமத்திற்கு அருகில், இரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோரது ஆசிரமங்கள் உள்ளது.

திருவிழா:

மாசி மாதம் தேய்பிறை துவாதசி.

வேண்டுகோள்:

மன நிம்மதி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

ஆசிரம வளர்ச்சிப்பணிக்காக நிதியுதவி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *