அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை

அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2493 8734 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காமேஸ்வரன்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாம்பரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆன்மிக உலகத்திற்கு பெரும் ஆர்வம் உண்டு. சென்னை தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களையும் ஒருசேர வழிபடும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை சிவசக்தி வடிவமாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சித்தரை வழிபடும் முறை உள்ளது. அவர்களுக்குரிய பூக்கள், நைவேத்தியம், வஸ்திரம் கொண்டு வழிபடுவது சிறப்பு.

இத்தலத்தில் பச்சைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள மகாமேரு மலை அகிலாண்டேஸ்வரியாகவும், இதிலுள்ள மரப்பலகை காமேஸ்வரன், காமேஸ்வரியாகவும் கருதப்படுகிறது.

பிரகாரத்தில் கணபதி, வேல், நாகராஜர், சேஷாத்ரி சுவாமிகள், அரூபலட்சுமி, 18 சித்தர்கள், கோமாதா, சுந்தர கணபதி, சுப்பிரமணியர், ராமன், ஆஞ்சநேயர், ஜடாமுனீஸ்வரர், சூலினி, துர்கா பரமேஸ்வரி, தெட்சிணாமூர்த்தி, சமயக்குரவர்கள், விஷ்ணு, ஐயப்பன், ராஜகாளியம்மன், குருவாயூரப்பன், நாகராஜர், காமதேனு உள்ளனர். இத்தலத்திற்கு மிக அருகில் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் 18 சித்தர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முதலில் சிவவாக்கிய சித்தர், கடைசியில் பாம்பாட்டி சித்தர் உள்ளனர்.

திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

கோரிக்கைகள்:

பட்டினத்தார், கடுவெளிசித்தர் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களுடன் ரோஸ் கலரில் துணி வைத்து வழிபட்டால், சூரிய தோஷம், பித்ரு சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிவ வாக்கிய சித்தர், உரோமச முனிவருக்கு திங்கள்கிழமைகளில் சங்கு, மல்லிகை பூக்களுடன் வெள்ளைத்துணி வைத்து வழிபட்டால் சந்திர தோஷம், மனோவியாதி தீரும் என்பது நம்பிக்கை.

போகர், புலிப்பாணிக்கு செவ்வாய்கிழமைகளில் வில்வம், சாமந்தி, அரளி, ஜாதிப்பூக்களுடன் சிவப்பு துணி வைத்து வழிபட்டால் நிலத்தகராறு, திருமணத்தடை, செவ்வாய் தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

இடைக்காடர், வள்ளலாருக்கு புதன்கிழமைகளில் மல்லிகை, விபூதி, ஜாதிப்பூக்களுடன் பச்சை கலர் துணி வைத்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும்.

காகபுஜண்டர், அகப்பேய் சித்தருக்கு மரு, துளசி, வில்வம், சங்கு பூக்களுடன் மஞ்சள் துணி வைத்து வழிபட்டால், குரு (வியாழன்) தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

கஞ்சமலை சித்தர், சென்னிமலை சித்தருக்கு பச்சிலை, வெற்றிலை, மல்லிகை, தாமரை பூக்களுடன் வெள்ளைத் துணி வைத்து வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்பர்.

கபிலர், கருவூராருக்கு மல்லிகை மற்றும் அனைத்து பூக்களுடன் கருநீலக்கலரில் துணி வைத்து வழிபட்டால், பிரம்மஹத்தி, சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சனிக்கிழமைகளில் அழுகணி சித்தரையும், பாம்பாட்டி சித்தரையும் துளசி, தாழம்பூ, தாமைர பூக்களுடன் கருப்பு துணி வைத்து வழிபட ராகுதோஷம் நீங்கும் என்கின்றனர்.

சட்டை முனிவர், குதம்பை சித்தரை வெள்ளிக்கிழமைகளில் ஜாதிப்பூ, விருட்சிப்பூ, வில்வம், துளசியுடன் பல கலர்களில் துணி வைத்து வழிபட்டால் கேது தோஷம் நீங்குமாம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *