அருள்மிகு நாட்ராயர்-நாச்சிமுத்து சுவாமி கோயில், மேட்டுப்பாளயம்

அருள்மிகு நாட்ராயர்நாச்சிமுத்து சுவாமி கோயில், மேட்டுப்பாளயம், திருப்பூர் மாவட்டம்.

 

இங்கே திருடர் திருந்துவர்; ஆடும் பேய் அலறி ஓடும்! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்மமாக வேண்டும்!’ என்று
சிவபெருமானிடம் வரம் பெற்ற பஸ்மாசுரன், வரத்தைப் பரிசோதிக்க சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்ற கதை. அசுரனிடம் இருந்து தப்பிக்க நினைத்து பூலோகம் வந்த ஈசன், பல்வேறு இடங்களில் ஓடி ஒளிந்தார். கடைசியாக அந்த உசிலை வனத்தை அடைந்தவர், ஐவரளிச் செடி ஒன்றின் பழத்துக்குள் பதுங்கினார். இதையறிந்து இங்கு வந்த அசுரன் ஆட்டுக்குட்டியாக மாறி, ஐவரளிச் செடிகளில் இருந்த பழங்களை எல்லாம் தின்னத் துவங்கினான். விஷயம் அறிந்து பதைபதைத்த பராசக்தி, சிவபிரானைக் காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவிடம்
வேண்டினாள்.

மகாவிஷ்ணு, அழகிய மோகினியாக அவதாரம் எடுத்து, அசுரனின் கண்ணில்படும்படி நடனமாடினார். மயங்கிய அசுரன், மோகினியை வசப்படுத்த விரும்பினான். மோகினியோ, “நீ மாமிசம் தின்று ஆச்சாரம் கெட்டுக் கிடக்கிறாய். அதனால், குளித்து சுத்தமாகி வாஎன்றாள்.
அசுரனும், குளிப்பதற்காகத் தண்ணீரைத் தேடி ஓடினான். அவன் கண்ணில் தண்ணீர் தென்படாதவாறு மாயம் செய்தார் மகாவிஷ்ணு. ஏமாற்றத்துடன் திரும்பிய அசுரன், “எங்கே தேடியும் தண்ணீர் இல்லையே. நான் என்ன செய்வது?” என்று மோகினியிடம் புலம்பினான். “பரவாயில்லை. மாடுகள் எங்கேனும் கோமியம் கழித்திருக்கும். அதையாவது தொட்டு தலையில் தெளித்துக் கொண்டு வாஎன்றாள் மோகினி. கோமியத்தை
தேடி ஓடினான் பஸ்மாசுரன். ஓரிடத்தில் மாட்டுக் குளம்படி தடத்தில் கோமியத்தைக் கண்டவன், அதைத் தொட்டு தலையில் வைத்தான்; அந்த இடத்திலேயே பஸ்மமானான். பிறகு, சிவபெருமானைப் பழத்தில் இருந்து வெளியே வருமாறு கூறினார் மகாவிஷ்ணு. வெளிவந்த ஈசன், எதிரில் மோகினியாக நிற்பது மகாவிஷ்ணு
என்பதை அறியவில்லை. மோகினியின் மீது மையல் கொண்டார் ஈசன். இதன் விளைவாக நாட்ராயர், நாச்சிமுத்து ஆகியோரின் அவதாரம் நிகழ்ந்தது. “இங்கேயே இருந்து பூலோகவாசிகளுக்கு அருள் புரியுங்கள்என்று சிவனாரும் விஷ்ணுவும் கட்டளையிட, அதன்படியே நாட்ராயர்நாச்சிமுத்து ஆகியோரின் அருளாட்சி இங்கே ஆரம்பமானது.


காலங்கள் உருண்டன. ஒருமுறை, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாட்டுக்கார சிறுவர்கள் சிலர், மாடு மேய்த்தபடி உசிலை வனத்துக்குள் வந்தனர். அங்கே புற்றின் அருகில் சென்ற பசுமாடு ஒன்று, அதன் மீது பாலைச் சொரிந்தது. வியந்த சிறுவர்கள், ஓடிச் சென்று தங்கள் எஜமானரிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். மறுநாளும் பசுமாடு பால் சொரிய, ஊரே திரண்டு வந்து பார்த்து வியந்தது. அன்றிரவு அந்த மாட்டின் சொந்தக்காரர் கனவில் தோன்றிய நாட்ராயர்நாச்சிமுத்து சகோதரர்கள், தங்களின் பூர்வீகத்தையும், முன்பு தாங்கள் இங்கே ஆட்சி செய்ததையும், புற்றில் தெய்வ சக்தியாக தாங்கள் தேங்கிக் கிடப்பதையும் சொல்லி, தங்களை எடுத்து பூஜித்தால், ஊர் மக்களை நோய் நொடி அண்டாமல் காப்போம் என்றும் கூறினர். விடிந்ததும், அவர் ஊராரிடம் கனவை விவரித்தார். புற்று இருந்த இடத்தில் நாட்ராயர்நாச்சிமுத்துவுக்கு கோயில் கட்டும் வேலையில் இறங்கினார்.


ஒருமுறை, பாரம் தாங்காமல் அவதிப்பட்ட பூமாதேவி, தனது பாரத்தைக் குறைக்க நினைத்து, மூன்று முனீஸ்வரிகளை உருவாக்கினாள். இந்த மூவரும் பூலோகத்தை அதகளம் செய்தனர். ஒரு கட்டத்தில், இளைய சகோதரிகள் இருவர் கட்டுக்குள் வந்தனர். மூத்தவளான மகாமுனி மட்டும் எவருக்கும் கட்டுப்படாமல், மலையாள தேசத்தில் ருத்ரதாண்டவம் ஆடினாள். நாட்ராயர்நாச்சிமுத்து சாமிகளால் மட்டுமே இவளை அடக்க முடியும் என்பதை அறிந்த மலையாள மக்கள், மேட்டுப்பாளையம் வந்து,
தங்களைக் காப்பாற்றுமாறு பிரார்த்தித்தனர். அவர்களிடம், மகாமுனியை
அடக்குவதாக வாக்குக் கொடுத்த நாட்ராயர்நாச்சிமுத்து சகோதரர்கள், மலையாள தேசம் சென்று மகாமுனியுடன் மோதினர். இவர்களைப் பார்த்து சிரித்தாள் மகாமுனி. “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்க, “நீங்கள் பொடியன்கள்; உங்களால் நான் கேட்கும் தீனியைத் தர முடியாதுஎன்றாள்.
உடனே சாமிகள் இருவரும், “நீ எங்களின் எல்லைக்கு வந்தால் உனக்குத் தேவையான தீனியைத் தருகிறோம்என்றனர். இதை நம்பி இவர்களுடன் புறப்பட்டாள் மகாமுனி. தங்களது எல்லைக்கு கோயில் வாசலுக்கு வந்ததும் சாமிகள் இருவரும், மகாமுனியை சங்கிலி போட்டுக் கட்டி, அதன் மறுமுனையை தங்களின் காலடியில் மிதித்தபடி நின்றனர். அவர்களிடம் மண்டியிட்டுத் தீனி கேட்டாள் மகாமுனி. அவளுக்கு ஒரேயரு ஆட்டுக் கிடாவைத் தந்தனர். நொடிப் பொழுதில் பிய்த்துத் தின்றவள், “இது பத்தாது; இன்னும் வேண்டும்என்று ஆவேசமாகக் கத்தினாள். “பொறுமையாக இரு. ஆடி மாதம், ‘போதும் போதும்னு நீயே சொல்ற அளவுக்கு நிறைய கிடாக்களை உனக்கு பலி கொடுப்பார்கள்என்றனர். இதைக் கேட்டு அடங்கிய மகாமுனி, அப்படியே மெள்ள மெள்ள சாதுவாகிப் போனாள்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மேட்டுப்பாளையம். இதன் தெற்கு எல்லையில்தான் நாட்ராயர்நாச்சிமுத்து சாமிகளின் கோயில் உள்ளது. ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதால், நாட்ராயர்நாச்சிமுத்து சாமிகளை தகரக் கொட்டகையில் வைத்துள்ளனர். எதிரில் உள்ள சந்நிதியில், மேற்கு நோக்கி சாந்தமாக இருக்கிறாள் மகாமுனி. தகரக் கொட்டகைக்கு அருகில் உள்ள உசிலை மரத்தில், பிள்ளை வரம் கேட்டு கட்டப்பட்டுள்ள முந்தானைத் தொட்டில்களைக் காணலாம். அடுத்து, வேண்டுதல் பலித்ததால் வைக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் குதிரைகளின் சிலைகள். தங்கள் வாகனங்கள் ஓட வேண்டும் என்று பிரார்த்தித்து, லாரி சிலைகூட இருக்கிறது!

ஏதேனும் பொருட்கள் களவு போனால், அதுபற்றி ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, இந்த சந்நிதியில் கட்டிவிட்டால் போதும். திருடியவர்கள், தாமாகவே வந்து பொருட்களை திருப்பிக் கொடுத்து விடுவார்களாம். அப்படிக் கொடுக்காவிட்டால், ஏழு நாள் முதல் ஏழு மாதத்துக்குள், திருடியவரின் குடும்பத்தையே இந்த சாமிகள் வேரறுத்து விடுவார்களாம்! காத்துக் கருப்பால் பாதிக்கப்பட்டவர்களின் கையில் ஊதுபத்தியைக் கொளுத்திக் கொடுத்து, மகாமுனி சந்நிதியில் உட்கார வைத்தால், ஓடாத பேயும் ஓடிவிடுமாம்! இங்கே, செவ்வாயும் புதனும்தான் விசேஷம். ஆடி மாத செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், மகாமுனிக்கு ஆயிரக்கணக்கில் கிடாக்களை பலியிடுகின்றனர். செவ்வாய் களில் பகல் 12 மணிக்கு சாமிகளுக்கு மஞ்சள் காப்பு பூஜை நடைபெறும். புதன் காலை 2 மணிக்கு புனுகு சாற்றி பூஜை. பிறகு, அதிகாலை 4 மணிக்கு பொங்கல் வைத்து துள்ளு மாவு இடித்து வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தேறும்.

கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ளது பஸ்மாசுரன் சுனை; நீர் வற்றாத இந்தச் சுனையைச் சுற்றிலும் மதில் எழுப்பி பாதுகாத்து வருகின்றனர். பக்தர்கள் இந்த சுனைக்கும் வந்து அர்ச்சனை செய்து சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். உப்பு, வெல்லம், மிளகு ஆகியவற்றை வாங்கி சுனையில் போட்டால் உடலில் உள்ள மருக்கள் மாயமாக மறைந்து போகுமாம்!
நன்றி சக்தி விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *