அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில், வண்டலூர், இரத்தினமங்கலம்

அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில், வண்டலூர், இரத்தினமங்கலம், சென்னை மாவட்டம்.

+91-94440 20084 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் லட்சுமி குபேரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இரத்தினமங்கலம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே இராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து இராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான். குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை இராணவன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது என்றும், கூறுவதுண்டு. குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார். அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், “ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லையேஎன்று எண்ணினான். இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள். குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான். அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார். அதன்பின், இலட்சுமி தேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.

சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இலட்சுமி கணபதி, குபேர இலிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது. இந்தியாவிலேயே இலட்சுமி குபேரருக்கு என கோயில் உள்ளது இங்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா:

தீபாவளி தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் குபேரனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும். வைகுண்ட ஏகாதசி, அட்சய திரிதியை

வேண்டுகோள்:

செல்வத்துக்கு அதிபதி இலட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து இலட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும். இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். இரத்னமங்கலம் குபேரனையும் இலட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை. திருப்பதி செல்லும் முன் இரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானதாகும். வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும்.

நேர்த்திக்கடன்:

லட்சுமி குபேரருக்கு திருமஞ்சனம் செய்து ஆடை அணிவித்து வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *