அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 94865 68160 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மன்
அம்மன் சரஸ்வதி, காயத்ரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது; சிவன், விஷ்ணுவிடம் இந்த சக்தி இல்லை என்பது குறித்து பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த விஷ்ணு, ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். பூதத்தை பார்த்து பயந்த பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். அதற்கு விஷ்ணு,”உனது கர்வத்தை அடக்குவதற்காகவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் மறந்து போகும்என்று சாபமிட்டார். வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு,”பூமியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும்என்றார். பிரம்மனும் பிரளய காலத்திலும் அழியாத தலமான கும்பகோணம் வந்து தவம் செய்தார். யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சேவை செய்தனர். அப்போது யாக குண்டத்தில் இருந்து, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றினார். சாபவிமோசனம் கொடுத்து வேதங்களை மீண்டும் சொல்லித்தந்து வேத நாராயணன்என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லிஎனப்பட்டாள். யாகம் முடிந்தவுடன் இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவபிருத ஸ்நானம்செய்வதற்காக விஷ்ணு தன் கதாயுதத்தால் பூமியை பிளந்து ஒரு நதியை உருவாக்கினார். இந்த நதி ஹரி சொல்லாறுஎன்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மருவி அரசலாறு எனப்பட்டது.

பிரம்மா சிவனின் தலைமுடியைப் பார்க்க அன்ன வடிவெடுத்து பறந்ததாகவும், அம்முயற்சியில் தோற்றதால், பார்த்து விட்டதாகப் பொய் சொன்னதாகவும் ஒரு கதையுண்டு. இதே போல், பிரம்மா சிவனை வணங்க வந்த போது, அவரது பத்தினியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகவும், அதனால் அவரது ஒரு தலை சிவனால் கிள்ளப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு. இதன் காரணமாக பிரம்மாவுக்கு வழிபாடு நின்று விட்டது. ஆனால், நான்கு வேதங்களையும் நான்கு வாயால் உச்சரித்துக் காப்பவர் பிரம்மா. படைத்தவரையே மீண்டும் சென்றடைய வேண்டும் என்பது ஆன்மிகத்தத்துவம். அந்த வகையில் படைத்த பிரம்மனையே மீண்டும் நாம் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் பிரம்மன் வழிபாடும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, பிரம்மனுக்கும் சில கோயில்கள் அமைந்தன. இந்தவகையில், கும்பகோணத்திலுள்ள பிரம்மன் கோயிலில் சரஸ்வதி, காயத்ரி ஆகிய தனது தேவியருடன் அவர் அருள் செய்கிறார்.

இத்தலத்திற்கு அருகில் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரையும் தரிசிப்பது தலத்தின் சிறப்பம்சம்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, சரஸ்வதி பூஜை

வேண்டுகோள்:

படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், தொழிலில் மேன்மையடையவும் இங்கு பிரம்ம சங்கல்ப பூஜைசெய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி, காயத்ரிக்கு விசேஷ அர்ச்சனை செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கும், சனிக்கிழமை பெருமாளுக்கும் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆயுள் அபிவிருத்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்திக்காக யோகநரசிம்மருக்கு ஹோமங்கள் செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *