அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி

அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர் மாவட்டம்.

+91 98428 13884 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளியன்று கூட்டத்தைப் பொறுத்து நள்ளிரவு 12 மணி அல்லது மறுநாள் காலை வரையிலும் கூட நடை திறந்திருக்கும்.

மூலவர்

வெற்றிவேல் முருகன்

உற்சவர்

வெற்றிவேலர்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

சி.மானம்பட்டி

மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்குமுன் இப்பகுதியில் வசித்த ஒருவர் இறை நம்பிக்கையின்றி இருந்தார். ஒருசமயம் அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு, பல நாட்களாக படுத்த படுக்கையாகிவிட்டார். டாக்டர் அவருக்கு சிகிச்சையளித்தும் பலன் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் டாக்டர்கள் அவரது வாழ்நாள் விரைவில் முடிந்துவிடும் எனச் சொல்லி சென்று விட்டனர். வீட்டில் அனைவரும் மிகுந்த கலக்கத்தில் இருந்தனர். அப்போது, படுக்கையில் இருந்தவர், மயில் மீது முருகன் காட்சி தருவதைப் போல உணர்ந்தார். படுக்கையில் இருந்து எழுந்தவர், உறவினர்களை அழைத்து எனக்கு பசிக்கிறது. சாப்பாடு கொடுங்கள்என்றார். அவருக்கு உணவு கொடுக்கவே, அதைச் சாப்பிட்டுவிட்டு நான் குணமாகிவிட்டேன்என்றார். உறவினர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் பக்தர், தாம் ஒளியில் கண்ட முருகனை, அதே வடிவத்தில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினார். இவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார். திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு வெற்றிலை துடைப்புஎன்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் சுவாமிக்குப் பூஜித்த வெற்றிலையைக் கொடுக்கின்றனர். பின், சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்டு, முருகனைத் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றிலை மங்கலப்பொருட்களில் ஒன்றாகும். இதனை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக்கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதோர் வெற்றிவேல் முருகனுக்கு மூன்று மஞ்சள் மற்றும் எலுமிச்சை வைத்து வணங்குகின்றனர். பின், அதையே அவர்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். எலுமிச்சை சாற்றை தம்பதியர் இருவரும் பருக வேண்டும். பின், மஞ்சளை குழந்தை பாக்கியம் இல்லாத பெண், தினமும் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், விரைவில் அந்த பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.

கோயில் எதிரே சற்று தூரத்தில் வங்காள விரிகுடா கடல் உள்ளது. சுவாமி கடலை பார்த்தபடி, வலது கையால் பக்தர்களை ஆசிர்வதித்து, மயில் மீது அமர்ந்திருக்கிறார். உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. மூலவர் விமானம், மூன்று கலசத்துடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நான்கு புறமும் முருகனின் பல்வேறு நிலைகள் சித்தரிக்கப் பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் மணி மண்டபம் அமைந்துள்ளது.

திருவிழா:

கந்தசஷ்டி, கிருத்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகத் திருவிழா.

வைகாசி விசாகத் திருவிழா விசேஷமாக நடக்கும். இவ்விழாவின்போது சுவாமி ஊஞ்சலில் காட்சி தருவார். கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். ஒருமுறை பங்குனி உத்திர திருவிழாவின்போது, முருகனுக்கு பக்தர் ஒருவர் கொடுத்த தேங்காயை உடைத்தபோது, அதில் 4 பிளவுகள் இருந்தது. அதை தற்போதும் கோயிலில் வைத்துள்ளனர்.

வேண்டுகோள்:

குழந்கை பாக்கியம் இல்லாதோர், வாய் பேச முடியாதவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பேச்சுத்தன்மை வளர இத்தல முருகனை வேண்டிக்கொண்டால் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

நீண்ட நாட்களாக நோய் ஏற்பட்டு குணமாகாமல் அவதிப்படுவோர், விரைவில் குணமாக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு சுவாமிக்கு பூஜித்த மிளகு பிரசாதம் தருகின்றனர். இதை பொடித்து பால் அல்லது நீரில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் நோய் குணமாவதாக நம்பிக்கை. வாய் பேசாதோர் குணம் பெறவும், பேச்சுத்தன்மை வளரவும் இந்த பிரசாதம் சாப்பிட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *