அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுவாமிநாத சுவாமி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

குண்டுக்கரை

மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

300 ஆண்டுகளுக்கு முன் இராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி, குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி,”குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு, புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்எனக் கூறி மறைந்தார். இராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று, அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலையானின் பெயரான சுவாமிநாதன்என்று பெயர் சூட்டினார்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன், சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.

திருவிழா:

சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. தைப்பொங்கலன்று சாகம்பரி என்ற காய்கறி, பழ அலங்காரத்தில் அம்பிகை காட்சி தருவாள். வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோத்சவம், சூரசம்கார விழா 7 நாள், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்குதான் சூர சம்கார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கு அழைத்து வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பொருள் வசதி படைத்தோர் அன்னதானம் செய்யலாம். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *