அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில், திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.
+91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, +91-98421- 93244, +91-94433 – 82946 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சுப்பிரமணிய சுவாமி |
|
உற்சவர் | – |
சண்முகர் |
|
அம்மன் | – |
தெய்வானை |
|
தல விருட்சம் | – |
கல்லத்தி |
|
தீர்த்தம் | – |
லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் |
தென்பரங்குன்றம் |
||
ஊர் | – |
திருப்பரங்குன்றம் |
|
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது. சூரனை வெற்றி கொண்ட முருகனுக்கு, இந்திரன் தனது மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தர சம்மதித்தார். அவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. திருமணத்திற்கு அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் என அனைவரும் வந்தனர். நாரதர் முன்னிலையில் முருகன், தெய்வானை திருமணம் நடந்தது. இதேகோலத்தில் சுவாமி இங்கு எழுந்தருளினார். சுவாமிக்கு “சுப்பிரமணியசுவாமி” என்ற பெயர் சூட்டப்பட்டது.
இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் “தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை” என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. “திரு + பரம் + குன்றம்.” பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகத் “திருப்பரங்குன்றம்” என ஆயிற்று.
பொருள் பெற்ற ஒருவன் வறியவன் ஒருவனைக் கண்டு இன்னின்ன பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால் போதும் பொருள் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப் பெறுவது போல் அருளைப் பெறவும் நம் முன்னோர் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை இதற்குச் சான்றாகும். சில தலங்களைக் குறிப்பிட்டு அங்கெல்லாம் எழுந்தருளியுள்ள முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்து உள்ளது. “ஆற்றுப்படை வீடுகள்” என்பதுதான் பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றாயிற்று எனலாம். அவற்றுள் ஆறு தலங்கள் சிறந்தன. அவை முறையே:
1 |
திருப்பரங்குன்றம் |
2 |
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) |
3 |
திருவாவினன்குடி (பழனி) |
4 |
திருவேரகம் (சுவாமிமலை) |
5 |
குன்றுதோறாடல் (திருத்தணிகை) |
6 |
பழமுதிர்ச்சோலை |
அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமீபத்தில் தங்கரதம் செய்யப்பட்டு, முன்பதிவின் பேரில் அதை இழுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இத்தலத்தின் ஆதிமரம் கல்லத்தி ஆகும். இந்த மரம் திருவாடாசி மண்டபத்தின் கீழ்ப்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது. இத்தீர்த்த நீரே குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும். கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.
மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன. இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன. கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர். திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோயில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன. இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.
சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவவழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களைக் காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்காரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு இலிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது. சிவபெருமான் முருகனைப் பெற்றெடுத்த போது, வெப்பம் தாளாமல் பார்வதிதேவி ஓடினாள். அப்போது, அவளது கால் சிலம்பு தெறித்து நவரத்தினங்களும் கீழே கொட்டின. அவை நவசக்திகளாக உருவெடுத்தன. இவர்களை “நவகாளிகள்” என்பர். இந்த தேவியர், சிவனை விரும்பி கர்ப்பமாயினர். இதையறிந்த பார்வதிதேவி, அந்தப் பெண்களை கர்ப்பத்துடனேயே வாழும்படி சாபமிட்டாள். குழந்தை பெற இயலாத காளிகள், சிவனிடம் முறையிட, அவர் பார்வதியை சமாதானம் செய்து, உலக நன்மை கருதியும், முருகனுக்கு துணையாகவும், அக்குழந்தைகள் பிறக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். பார்வதியும் மனமிரங்கி, ஒன்பது குழந்தைகளைப் பிறக்கச் செய்தாள். அவர்கள் முருகனுக்கு துணையாக இருந்து சூரபத்மனை அழிக்க உதவினர். வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசுவரன், வீரராட்சஷன், வீரமார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன், வீரசூரன் என்பது அவர்களின் பெயர். இவர்களுக்கு கோயிலின் முன்மண்டபத்தில் தனிசன்னதி உள்ளது.
சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார். மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக ஐதீகம். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையைத் தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக “உருத்ராபிஷேகம்” செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு “வெள்ளிக்குடத்தில்” சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய உருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும். சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது தவறு என எண்ணிய முருகன், இத்தலத்தில் சிவனை வேண்டித் தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று சிவன் காட்சி தந்தார். இந்த சிவன், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். ஆனால், அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகனே வீதியுலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். எனவே, இங்குள்ள முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்” என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கும். கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும் முருகனுடன் “சோமாஸ்கந்தராக” இருக்கிறார். இது விசேஷமான அமைப்பாகும். துர்க்கை அம்மனுக்கு சிவன், விமோசனம் தந்தபோது சோமாஸ்கந்தராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. சிவலிங்கம் துர்க்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், “தேவி லிங்கம்” என்கின்றனர். சுவாமி, “சாந்தகாரம்” எனும் மருந்து பூசப்பட்டவர் என்பதால் சாம்பிராணித் தைலம் மட்டும் பூசி வழிபடுகின்றனர். வேதவியாசர், பராசர முனிவர் ஆகியோர் சுவாமியை வழிபட்டுள்ளனர்.
துர்க்கையம்மன் ராஜகோபுரத்திற்கு நேரே வடக்கு பார்த்து, காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை “மால்விடை கோயில்” (மால் – திருமால், விடை – நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார். மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து இலிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனைத் தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.
பரம்பொருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்” என்றும், தலம் “பரங்குன்றம்” என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சிவன் கோயிலாகவே இருந்துள்ளது. இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை “சத்தியகிரீஸ்வரர்” என்று அழைக்கின்றனர். முருகன், தெய்வானையைத் திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. இவரை வேத வியாசர், பராசரர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். ஆனி பவுர்ணமியில் சிவனுக்கு முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது விசேஷம். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர்.
பொதுவாக, கோயில்களில் சுவாமியைச் சுற்றி பிரகாரங்களும், பரிவார தேவதைகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். பிள்ளையார்பட்டி குடவறைக்கோயில் என்றாலும், அங்குள்ள சிவன் சன்னதியை சுற்றிவரலாம்.
திருப்பரங்குன்றம் கோயிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்” என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.
கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களில் பெரிய நந்திகள் இருக்கிறது. இத்தலங்களில் சிவனின் அமைப்பிற்கேற்ப நந்தி பெரிதாக அமைக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றத்தில் சிவன், மலை வடிவாக இருப்பதால் இங்குள்ள நந்தியும் மலைக்கேற்ப சற்று பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர். கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர். இத்தலவிநாயகர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் இலட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர்.
ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே “திருப்பிய பரங்குன்றம்” என்றழைக்கப்பட்ட இவ்வூர் “திருப்பரங்குன்றம்” என்று மருவியது. அருணகிரியார் திருப்புகழில், “தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே” என்று பாடியிருக்கிறார். இந்தக் கோயிலில் சிவன், நின்றகோலத்தில் கிழக்கு திசை நோக்கியுள்ளார். இவருக்கு பின்புறத்தில் நந்தி நின்ற நிலையில் உள்ளது. அம்பிகை இல்லை. அருகில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு திசை நோக்கி நின்றிருக்கிறார். ஆனால், மயில் வாகனம் இல்லை. அவருக்கு வலப்புறத்தில் நடராஜர் அருள்புரிகிறார். இவரது வலது மேற்பகுதியில் பஞ்சமுக விநாயகர், இடது மேற்புறம் முருகன் இருவரும் இருக்கின்றனர். பஞ்சமுக விநாயகரைச் சுற்றிலும் மேலும் எட்டு விநாயகர்கள் இருக்கின்றனர். எண்திசைகளைக் குறிக்கும்விதமாக இந்த விநாயகர்கள் இருப்பதாக சொல்கின்றனர்.
பாடியவர்கள்:
நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்.
திருப்புகழ்
வினைத்த லந்தனி லலகைகள் குதிகொளவிழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுணவிரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா –
மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே;
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே –
தெனத்தெனந்தன எனவரி யளிநறைதெவிட்ட அன்பொடு பருகுயபொழில்திகழ் திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
–அருணகிரிநாதர்
திருவிழா:
வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
கோரிக்கைகள்:
திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். இராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
வழிகாட்டி:
தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம் மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஐபாளையம் வழியாக தென்காசி செல்லும் இரயில்களும், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி செல்லும் இரயில்களும் திருப்பரங்குன்றம் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
Leave a Reply