அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர்
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர் – திருச்சி மாவட்டம்.
காலை7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – துறையூர்
மாநிலம்: – தமிழ்நாடு
வல்லாள ராஜா என்பவர் துறையூர் பகுதியை ஆண்டு வந்தார். அவர் பெரிய கருமி. எப்படிப்பட்ட கருமி தெரியுமா? காக்கா, குருவிகள் வயலில் உள்ள நெல் மற்றும் தானியங்களை தின்றுவிடுமே என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி அவற்றை வரவிடாமல் தடுக்கும் கருமி. இப்படிப்பட்ட கருமிக்கு குழந்தை பிறக்குமா? ராச்சி பரிபாலனமே கையில் இருந்தும், எதிர்காலத்தில் அதை அனுபவிக்கப் பிள்ளை இல்லை.
அரசனுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது. “அம்மா! எனக்கு குழந்தையில்லை. நாடாளக் குழந்தை வேண்டும்,” என உருக்கத்துடன் வேண்டினான். அந்தக் கஞ்சனையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சி குழந்தை வரம் தந்தாள். ராணி கருவுற்றாள்.
அம்பிகை தன் சோதனையை ஆரம்பித்தாள். பதினைந்து மாதமாகியும் குழந்தை பிறக்கவில்லை. அரச தம்பதியரின் முகத்தில் கலவரம். அவர்கள் பேச்சியம்மனைத் தேடி ஓடினர்.
முதியவள் வடிவத்தில் வந்த பேச்சியம்மன், ராணியை அலக்காகத் தூக்கி தன் மடியில் வைத்து, ராணியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை இடுப்புக் கொடியுடன் வெளியே எடுத்தாள்.
பின்னர் மனமிரங்கி, சாந்தமாகி, அங்காள பரமேசுவரி என்ற பெயரில் தங்கினாள். மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியின் அம்சமாய் இங்கு துறையூரில் விளங்குகிறாள்.
அம்பிகையை சயனநிலையில் காண்பதென்பது மிகவும் அரிதான ஒன்று.
கோயம்புத்தூரில் கோணியம்மன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வண்டி மறிச்ச அம்மன் இப்படி விரல் விட்டு எண்ணும் அளவிலேயே சயனநிலை அம்பிகை சன்னதிகள் உள்ளன. இவ்வரிசையில் திருச்சி மாவட்டம் துறையூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சிறப்பான இடத்தைப் பிடிக்கிறாள்.
சயனநிலை: இங்கு, சயனநிலையில் பெரியநாயகி என்ற பெயரிலும் அம்பிகை அருள்பாலிக்கிறாள். உயரம் எட்டே முக்கால் அடி. இச்சன்னதியின் வாசலில் சாந்த நிலையில் மடியில் குழந்தையை வைத்த பேச்சி இருக்கிறாள்.
பிரகாரத்தில் சுதை வடிவில், ராணியின் வயிற்றைக் கிழித்து பிரசவம் பார்க்கும் அகோர வடிவில் உள்ளாள்.
பிரகாரத்தில் பால சுப்பிரமணிய சுவாமி, மதுரை வீரன் தம்பதியர், அகோர வீரபத்திரர், பாவாடைராயன், மகிஷாசுரமர்த்தினி, ராகு கால துர்க்கை சன்னதிகளும் உள்ளன.
ஒரு மண்டபத்தில் ஆறுபடை முருகன், தெட்சிணாமூர்த்தி ஆகிய சாந்த சொரூப தெய்வங்களும் காட்சியளிக்கின்றனர்.
சிவராத்திரிக்கு மறுநாள் துவங்கி 9 நாட்கள் மயானக் கொள்ளைத் திருவிழா நடத்தப்படுகிறது.
குழந்தை வரம் வேண்டிப் பெண்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இத்தெய்வத்தை தங்கள் ஊரில் இருந்தபடியே நினைத்துக் கொண்டால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
அம்மனுக்குத் திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply