அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.

+91 – 4552 – 251 428, 98421 51428

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

குமார கோயில்

ஊர்

புத்தூர், உசிலம்பட்டி

மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

நாகாசுரன் என்ற கொள்ளையன் மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறைநாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு வந்தார். நாகாசுரனை மறித்த முருகன், “அடேய். நீ செய்வது தவறு. எனவே, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிடுஎன எச்சரித்தார். முருகப்பெருமான் யாரையும் அவ்வளவு எளிதில் அழிக்கமாட்டார். அவர் கருணைக்கடல். பத்மாசுரனுக்கு கூட அவர் ஞானம் கொடுத்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொள்ளவே செய்தார். அவ்வகையில், நாகாசுரனுக்கும் எச்சரிக்கையே விடுத்தார். ஆனால், யாராலும் எதிர்க்க முடியாத தன்னை, ஒரு இளைஞன் துணிச்சலுடன் வந்து எதிர்த்ததால் அவமானமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார். இளைஞனாக வந்ததால், “குமரன்என்றும், தலத்திற்கு குமார கோயில்என்றும் பெயர் ஏற்பட்டது. இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் பிற்காலத்தில் புத்தூர்என்ற பெயர் ஏற்பட்டது. மூலவர் சுப்பிரமணியர் இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்திருக்கிறார். இத்தகைய கோலத்தில் முருகனைத் தரிசிப்பது அபூர்வம். முதலில் இவர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது சுவாமியின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர். தைப்பூசத்தன்று இவருக்கு விசேஷ மகாபிஷேகம் நடக்கும்.

இக்கோயிலில் தாணுமாலய இலிங்கம் இருக்கிறது. ஆவுடையார் (பீடம்) இல்லாமல் பாணம் மட்டுமே இருக்கும் இந்த இலிங்கத்திற்குள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவருமே ஐக்கியமாகியிருப்பதாக ஐதீகம். அகத்தியருக்காக மும்மூர்த்திகளும் இவ்வாறு காட்சி தந்தனர். இதனால், “அகத்திய இலிங்கம்என்றும் இதற்கு பெயருண்டு. கோயில் வளாகத்திலுள்ள இலுப்பை மரத்தின்கீழ், காவல் தெய்வம் முனீஸ்வரன் அரூபமாக (உருவமின்றி) அருளுகிறார். பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, இரட்டை விநாயகர், நவக்கிரகங்கள், சனீஸ்வரர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன.

திருவிழா:

தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள், அக்குறை நீங்க இத்தல இறைவனை பிரார்த்திக்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *