அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2478 0436,93828 89430 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 12.30மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சுப்பிரமணியசுவாமி

தலவிருட்சம்

வில்வம்

தீர்த்தம்

சரவணபொய்கை

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குன்றத்தூர்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார்.

பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் கந்தழீஸ்வரர்என்ற பெயரில், தனிக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர். 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் முருகனை, வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும். இவ்வாறு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

முருகன் சன்னதி முன்புள்ள துவாரபாலகர்கள் இருவரும், முருகனைப் போலவே கையில் வஜ்ரம், சூலம் வைத்திருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர்என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார். சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்கோயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

திருவிழா:

வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம். கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து, முருகனுக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *