அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர் மாவட்டம்

+91- 416 – 221 2761, 94869 39198, 94438 00039 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்பிரமணியர், காங்கேயன்
உற்சவர் சண்முகர்
தீர்த்தம் சரவணப்பொய்கை
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் காங்கேயநல்லூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களுக்கு அசுரர்களால் துன்பம் உண்டாகவே, தங்களைக் காத்தருளும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதனை வாயு, அக்னி இருவரும் கங்கையில் சேர்த்தனர். அதிலிருந்து ஆறு குழந்தைகள் உருவாகி, கங்கையிலிருந்த தாமரை மலர்களில் தவழ்ந்தனர். அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்பு பார்வதி, ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினாள். முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தந்தார். கங்கையில் குழந்தையாக தவழ்ந்ததால் முருகனுக்கு, “காங்கேயன்என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயரிலேயே இத்தலத்தில் முருகன் அருளுகிறார்.
அருணகிரியார் இத்தலம் வந்தபோது, சுவாமிக்குத் தயிர் சாத நிவேதனம் படைத்து பூஜை செய்து வழிபட்டார். அப்போது ஆறு அடியார்கள் அங்கு வந்தனர். அருணகிரியார், முருகனுக்கு படைத்த தயிர் சாதத்தை, அவர்களுக்கு படைத்தார். முருகனே இவ்வாறு ஆறு அடியார்களாக வந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் தற்போதும் இத்தலத்தில், முருகனுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஆறு அடியவர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

மூலஸ்தானத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். சன்னதி முன் மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். இவருக்கு தனி வாசலும், துவாரபாலகர்களும் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு வருபவர்கள் முதலில் அருணகிரியாரை தரிசித்து விட்டு அதன்பின்பே, முருகனை தரிசிக்கிறார்கள். இங்குள்ள விநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.
பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், நவவீரர்கள், நால்வர், சரஸ்வதி, லட்சுமி, வீரபத்திரர், நாகர், பைரவர் என பரிவார தெய்வங்கள் இருக்கின்றன. முருகனுக்கான ஸ்மித்ர சண்டிகேஸ்வரருக்கும் சன்னதி இருக்கிறது. காங்கேயனாகிய முருகன் அருளும் தலம் என்பதால் இவ்வூர், “காங்கேய நல்லூர்என்றழைக்கப்படுகிறது.
முருக பக்தரான வாரியாரின் தந்தை மலையதாசர், இக்கோயிலுக்கு கோபுரம் கட்ட விரும்பினார். திருவண்ணாமலை சென்ற அவர், திருப்புகழ் சுவாமி என்றழைக்கப்பட்ட லோகநாதரைச் சந்தித்தார். கோபுரம் கட்ட உதவும்படி கேட்டார். அவர் அடுத்த வருடம் வரும்படி சொல்லி விட்டார். மறு வருடமும் அவரை சந்திக்கச் சென்றார் மலையதாசர். அப்போது திருப்புகழ் சுவாமி விபூதியும், ஒரு ரூபாயும் கொடுத்து திருப்பணியை துவங்கும்படி கூறினார். மலையதாசர் திருப்பணியை துவங்க, கோபுரம் விரைவில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு எதிரில் வாரியார் அதிஷ்டானம் இருக்கிறது.

திருவிழா:

மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், தைப்பூசம்.

சித்திரை பிறப்பின்போது, முருகன் வடக்கு கோபுரத்தின் கீழ் எழுந்தருளி காட்சி தருகிறார். வடக்கு, குபேர திசை என்பதால் அன்று வடதிசை நோக்கிய முருகனைத் தரிசித்தால் வருடம் முழுதும் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு எழுந்தருளுகிறார்.
ஐப்பசியில் கந்த சஷ்டி விழா எட்டு நாட்கள் நடக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த நாள் முருகன், வள்ளி திருமணம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தின்போது இங்குள்ள சண்முகருக்கு, விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு புறப்பாடாகிறார்.

கோரிக்கைகள்:

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில், முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, தயிர்சாத நிவேதனம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறிட முருகனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *