அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்)
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்)- 602025, திருவள்ளூர் மாவட்டம்.
+91- 94436 39825.
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
– விநாயகர், தாண்டவராயன்
தல விருட்சம்: – வேப்பமரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – ராமாபுரம் (புட்லூர்)
மாநிலம்: – தமிழ்நாடு
பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாகத் தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தான். அதே நிலத்திலேயே வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.
மகிசுரன் அசுர குணம் கொண்டவன். ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானம் வாங்கி கொண்டு, வட்டி மேல் வட்டி போட்டு சொத்தை அபகரித்து வந்தான். பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.
கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான். ஊரார் முன்னிலையில்,”நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி ஒரு நாள் இரவில் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி பொழுது விடிவதற்குள் முடிக்கவேண்டும். இல்லையெனில் தொலைத்து விடுவேன்,” என எச்சரித்துச் சென்றான். பூங்காவனம் என்பது தீய சக்திகள் உலவும் இடம். தினம் தினம் அடிவாங்கி சாவதை விட, ஒரே நாளில் செத்து விடலாம் எனத் தீர்மானித்த பொன்மேனி சிவராத்திரி இரவில் பூங்காவனத்தை அடைந்தான். அங்கு தன் விருப்ப தெய்வமான கருமாரியை வணங்கி நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது ஒரு முதியவரும், மூதாட்டியும் அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். பாட்டி தாகத்தில் தவித்தாள். உழுது கொண்டிருந்த பொன்மேனி இதைக் கண்டு பரிதாபப்பட்டு, பெரியவரை அழைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.
திரும்பி வந்து பார்த்த போது மூதாட்டியைக் காணவில்லை. அவன் அதிர்ச்சியுடன் முதியவரின் பக்கம் திரும்பிய போது அவரும் அங்கு இல்லை. பின்னர் மீண்டும் உழுதான் பொன்மேனி. அப்போது கலப்பை எதன் மீதோ பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட பொன்மேனி அதிர்ச்சி அடைந்தான். அப்போது ஒரு அசரீரி,”பயப்படாதே. நான் அங்காள பரமேஸ்வரி. சிவனுடன் முதியவள் வடிவத்தில் வந்த நான், மண்புற்றாக மாறிவிட்டேன். ஏர் முனை என்னை குத்தியதால் ரத்தம் பீறிட்டது. வறுமையில் வாடிய நீ என்னை வேண்டியதால் ஈசனுடன் இங்கு வந்தேன். நிலத்தை உழுது, நான் இங்கு இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய நீ, இனிமேல் எப்போதும் என்னையும் சிவனையும் பூசிக்கும் பேறு பெற்றாய்,”எனக் கூறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த மண்ணெல்லாம் விலகிப் புற்று தெரிந்தது. அதில் அம்மன் மல்லாந்து படுத்த நிலையில் இருந்தாள். பூங்காவனத்தில் தோன்றியவள் என்பதால் “பூங்காவனத்தம்மன்‘ என்ற பெயர் சூட்டப்பட்டது.
அம்மன் கால் நீட்டி, மல்லாந்த நிலையில் வாய்திறந்து பிரசவ காலத்தில் துடிக்கும் பெண்ணைப் போல காட்சியளிக்கிறாள்.
அம்மனுக்கு பின்புறம் கருவறையில் விநாயகர், தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேசுவரி ஆகியோர் உள்ளனர். எதிரில் நந்தி வாகனம் உள்ளது.
சுற்றுப்பிரகாரத்தில் தல விருட்சமான வேம்பு உள்ளது. அதன் கீழே சுயம்புவாக எழுந்துள்ள மற்றொரு மண்புற்று, கருமாரி, விநாயகர், நாக தேவதை ஆகியோர் உள்ளனர்.
சன்னதிக்குள் நுழைந்தவுடன் உடலில் சிலிர்க்கிறது. கோயில் முழுவதும் மஞ்சள், குங்கும வாசனை தான். பெரும்பாலும் பெண்கள் அதிகமாக வருகிறார்கள். இவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற அம்மனின் பாதத்தில் எலுமிச்சம்பழம் வைத்து, தங்கள் புடவை முந்தானையைப் பாதத்தின் அருகே பிடித்து வேண்டுகின்றனர். எலுமிச்சம்பழம் பாதத்தில் இருந்து உருண்டு வந்து முந்தானையில் விழுந்தால் கேட்டது கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
சிவராத்திரி, மாசி மகத்தன்று மயான கொள்ளை, ஆடி வெள்ளி, அமாவாசை சிறப்பு பூசை.
குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள், திருமணத்தடை இருப்பவர்கள், வீட்டில் பிரச்னை இருப்பவர்கள் புடவை முந்தானையிலிருந்து சிறிது கிழித்து கோயில் வெளியே மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விடுகிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறியவுடன் வந்து அம்மனுக்கு பூசை செய்து நன்றி கூறி செல்கிறார்கள்.
குழந்தை இல்லாதவர்கள் இங்கு அதிகமாக வந்து குழந்தைச் செல்வத்திற்காக நேர்ந்து கொள்கின்றனர்.
Leave a Reply