அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு

அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர் மாவட்டம் .

+91-94434 45055 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சிவசுப்பிரமணியர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

கோயிலுக்கு எதிரில் உள்ள குளம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

வில்லுடையான் பட்டு

மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சில யுகங்களுக்கு முன்பு காடாக இருந்த இந்தப் பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தைக் காக்க முருகன் வில்லேந்தி காவல் காத்தார். அதாவது, சூரசம்காரத்தின் போது தான் முருகனுக்கு வேல் கிடைத்தது. அதுவரை அவரது ஆயுதமாக வில் தான் இருந்துள்ளது. எனவே இது மிகவும் பழமை வாய்ந்த தலமாகும். முருகன் முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வீரனாகவும் காட்சியளித்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு முன்பாக பெரிய அளவில் ஏழு வேல்கள் முருகனின் உத்தரவுக்காக காத்திருக்கும் சேவகர்கள் போல காட்சியளிக்கிறது. அடுத்து இருபுறங்களிலும் 8 அடி உயர துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவசுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்தி பாதங்களில் இறகு அணிந்து அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகளை செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது. கோயிலுக்கு எதிரே அரசும், வேம்பும் உள்ளது. மரத்தின் அடியில் விநாயகப்பெருமான், நாகதேவதைகள் சன்னதியும், கோயிலின் பின்புறம் வன்னிமரமும், நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.

வில்லேந்திய இராமன், அர்ஜூனன் ஆகியோரைக் கோயில்களில் பார்க்கிறோம். ஆனால், வேலேந்தும் முருகப்பெருமான், வில்லேந்தி அருள்பாலிக்கும் கோயில், நெய்வேலி அருகேயுள்ள வில்லுடையான் பட்டு கிராமத்தில் இருக்கிறது. இக்கோயிலில் உள்ள முருகன் சிலை பூமியில் புதைந்து கிடந்ததாகவும், அதை உழுத போது, அவர் வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உழும்போது கலப்பை தட்டி நின்றதாகவும், மண்வெட்டி கொண்டு அவ்விடத்தில் வெட்டிய போது இரத்தம் வந்ததாகவும், தொண்டி எடுத்தபோது முருகன் சிலை வெளிப்பட்டதாகவும் தல புராணம் சொல்கின்றது. அந்த வெட்டுக்காயம் இப்போதும் மூர்த்தியின் இடது தோளில் சிறு வடுவாக உள்ளதையும் பார்க்கலாம். இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இவருக்கு நெற்றிக்கண்ணும் இருக்கிறது.

திருவிழா:

கோயில் எதிரே அமைந்துள்ள திருக்குளத்தில் பங்குனி உத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடக்கும். கார்த்திகை, தைப்பூசம் மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகளை செலுத்தும் பழக்கம் இங்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *