அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

+91 – 4577 – 264227, 97905 83820

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்

சண்முகநாதர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்

அரசமரம்

தீர்த்தம்

தேனாறு

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

அரசவனம்

ஊர்

குன்றக்குடி

மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

சூரனாதியோர் தேவர்களைப் பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை, நாங்கள்தான் மயிலை விட வேகமாகப் பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாகப் பொய் சொன்னதால், மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போகச் சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கித் தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாகத் தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து, சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலைஎன்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டர். மலை மீதுள்ள இராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டர். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டர். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான்என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு.

கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப்பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார். அழகே வடிவாய் அருட்சக்தியாய் அம்மை எழுந்தருளியுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம். முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தனிச் சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும்.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. இத்தலத்தில் அகத்தியர், பாண்டவர்கள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும். கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா.

தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா.

சித்திரை பால்‌பெருக்கு விழா.

வைகாசி வைகாசி விசாகப் பெருவிழா.

ஆனி மகாபிசேகம்.

ஆடி திருப்படிபூஜை.

ஆவணி ஆவணிமூலம், பிட்டுத்திருவிழா. புரட்டாசி அம்புபோடும் திருவிழா.

ஐப்பசி கந்த சஷ்டி திருவிழா.

வேண்டுகோள்:

நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர, சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களைக் காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *