அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, அழகர்கோவில், மதுரை மாவட்டம்.

+91- 452-247 0228 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்பிரமணிய சுவாமி தம்பதியர்
அம்மன் வள்ளி, தெய்வயானை
தல விருட்சம் நாவல்
தீர்த்தம் நூபுர கங்கை, சிலம்பு ஆறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் சோலைமலை (அழகர்கோயில்)
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

ஓளவையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் ஓளவைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார். ஒரு முறை ஓளவை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, ஓளவை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, “என்ன பாட்டி. மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பைப் போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?” என்றான். சந்ததோஷப்பட்ட ஓளவை வேண்டும்என்றார். உடனே முருகன்,”பாட்டி. தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?”என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த ஓளவை ஏதும் புரியாமல்,”சுட்ட பழத்தையே கொடேன்என்றார். சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. ஓளவை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,”பாட்டி. பழம் மிகவும் சுடுகின்றதா? ஆறியவுடன் சாப்பிடுங்கள்என்று கூறி சிரித்தான்.

சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, “உயிர்களின் மீது ‘உலகப்பற்று’ என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்” என்பதே அது. இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம். முருகன் மாமனையும், மருகனையும் ஒருசேரப் பார்க்கக்கூடிய தலம்தான் பழமுதிர்சோலையாகிய அழகர்மலை. வள்ளியை மணமுடிக்க முருகன் இத்தலத்தில் முதியவர் வேடம் கொண்டு, தன் சகோதரரான விநாயகரிடம் உதவி கேட்க, விநாயகர் யானை வேடம் கொண்டு வள்ளியை துரத்த, முதியவர் வேடம் கொண்ட முருகன் வள்ளியை கரம்பிடித்த தலம் இத்தலம் ஆகும்.

பழமுதிர்சோலை ஆறுபடை வீடுகளுள் ஒன்று. ஞானப்பழம் முருகன். எனவே அந்த ஞானப்பழம் வாழும் பேறு பெற்றதால் இம்மலை பழமுதிர்சோலைஎனப் பெயர் கொண்டதாம். மலையில் பழங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் பழமுதிர்சோலை எனப்படும் பெயர் கொண்டு விளங்குகிறது. அழகு கொழிப்பதால் அழகர் மலை எனப்படுகிறது. முருகன் என்றால் அழகு. எனவே அவன் குடிகொண்டதால் அழகர் மலை ஆயிற்று.

திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற நூபுர கங்கைஎன்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்தத் தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது. மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத் தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோயும் பறந்தோடிவிடும் என்கிற நம்பிக்கையில் இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது. மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் எனறு இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி, காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும்.

பாடியவர்:

அருணகிரிநாதர்

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி

அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;

 

இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்

 

மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

 

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

அருணகிரிநாதர்

திருவிழா:

தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.

கோரிக்கைகள்:

திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *