அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, புஞ்சைபுளியம்பட்டி வழி, மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4254 – 287 418, 98659 70586

(மாற்றங்களுக்குட்பட்டவை)

திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 – மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

மூலவர்

ஓதிமலையாண்டவர்

உற்சவர்

கல்யாண சுப்பிரமணியர்

தலவிருட்சம்

ஒதிமரம்

தீர்த்தம்

சுனை தீர்த்தம்

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

இரும்பறை

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகைப் படைத்தார். இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம்எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்குப் பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு ஓதிய (உபதேசம் செய்த) மலை என்பதால் தலம், “ஓதிமலைஎன்றும், சுவாமி ஓதிமலையாண்டவர்என்றும் பெயர் பெற்றார்.

படைப்புத்தொழில் செய்தபோது இருந்த அமைப்பில் இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த அமைப்பிலுள்ள முருகனை, “கவுஞ்சவேதமூர்த்திஎன்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது. பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறைஎன்று அழைக்கப்படுகிறது.

சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார். ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசத்தில் 9 நாள் பிரம்மோற்ஸவம். சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு, முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை, “வரம் கேட்டல்என்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பொருள் வசதி படைத்தோர் அன்னதானம் செய்யலாம். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *