அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்

அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி அருகில், தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுப்ரமணியர்
தீர்த்தம் தாமிரபரணி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன. சனிக் கிழமைகளில் (புரட்டாசி சனியில் வழிபடுவது கூடுதல் விசேஷம்) தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட, சர்ப்ப தோஷம் நீங்கும்; சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்.

சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பழநியாண்டவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு.
திருவிழா:
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி.
பிரார்த்தனை:
சுப்ரமணிய சுவாமியை, சஷ்டி நாளில் விரதமிருந்து தரிசிக்க, தடைபட்ட திருமணம் நடந்தேறும், பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவர் என்பது நம்பிக்கை. மேலும் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பால்குடம், காவடி எடுத்தும், முடிகாணிக்கை செலுத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் :
புதுக்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும்போது, பாலத்தின் நிறைவுப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *