அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை

அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முருகனின் வேல்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

வேல்கோட்டம்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம் தமிழ்நாடு

அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத்தில் வேல் பற்றிய சிறப்புகளை ஏராளமான பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். உற்றார் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் துணையின்றி தனித்துச் செல்லுகின்ற வழியில் தனக்குத் துணையாக வந்து உதவுவன வடிவேலும் மயிலுமே எனப் பொருள்பட பாடலில் குறிப்பிட்டு உள்ளார். வேல் ஞானத்தில் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப் பெருமானை, ஞான வேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேசமுடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி, குருபரா, உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கினோம் எனக்கூறி அவரது ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

மாயையே உருவான கிரௌஞ்ச மலையைப் பொடியாக்கிய வேலைப்பணிவோர்க்கு கொடிய மிருகங்கள், பறவைகள், தீராத வியாதிகள், கிரகதோஷங்கள் முதலிய பாதகங்களால் எந்தவிதமான துன்பங்களும் நேராது என ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளது. வெற்றிவேல், வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என பல்வேறு திருநாமத்தில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பல்வேறு நூற்களில் காணலாம். வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேல் சின்னத்தை உடலில் அணிந்து கொள்வதும், மனதார வேல் வேல் என ஓதுவதும், வேலை மனதில் நிறுத்தி தியானிப்பதும், வேலை வழிபடுவோர்க்கும் வினைகள் பட்டழியும். இதனைத்தான் வேலுண்டு வினை இல்லை என்பர். இத்தனை சிறப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற வேலுக்கென ஒரு தனிக் கோயில். கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வேல் கோட்டம் தியான மண்டபம் என அழைக்கப்படுகிறது இக்கோயில். 6 3/4 அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழா:

கிருத்திகை, பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

பிராணிகளால் ஏற்படும் தொல்லைகள் தீரவும், கிரக தோஷங்கள் நீங்கவும் இங்குள்ள முருகனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

இங்குள்ள வேலுக்கு அபிஷேகம் செய்தும், சிறப்பு அர்ச்சனைகள் செய்தும் வேண்டிக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *