அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2722 2049 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ஆறுகால பூஜை நடக்கிறது.

மூலவர்

முருகன்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

கச்சி

ஊர்

காஞ்சிபுரம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

ஓம்என்னும் பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனை முருகன் சிறையிலடைத்தார். அதன் பின், பிரம்மனின் உருத்ராட்ச மாலை, கமண்டலத்தை பெற்று பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அவ்வாறு படைப்பை இத்தலத்தில் நடத்தியதாக நம்பிக்கை.

மேற்கு நோக்கியுள்ள இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவனை தரிசித்த பலன் கிடைக்கும். எனவே இவரை ஒருவரில் மூவர்என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்குத்தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. இவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர்என அழைக்கிறார்கள்.

முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண, சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும், கோயில் நகரமானதுமான காஞ்சியில் அமைந்தது தான் குமரக்கோட்டம். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது. குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. காஞ்சிக்கு செல்பவர்கள் காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்து குமரனையும் தரிசித்தால்தான் முழுப்பலன் கிடைக்கும்.
புராணங்களுள் மிகவும் புகழுடையது கந்த புராணம். இந்த புராணம் குமரக்கோட்டத்தில் எழுந்ததே. இத்தல முருகனே, “திகட சக்கரம்என அடியெடுத்துக் கொடுத்து, தனக்கு பூஜை செய்யும் கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு கந்தபுராணம்எழுதுமாறு செய்தான். கந்தபுராணம் அரங்கேறிய போது ஏற்பட்ட ஐயத்தையும், இத்தல முருகனே புலவர் வடிவத்தில் வந்து தீர்த்து வைத்தான். கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. இத்தலத்திற்கு அருணகிரி நாதரின் திருப்புகழும் பெருமை சேர்க்கிறது. பாம்பன் சுவாமிகள் குமரக்கோட்டத்திற்கு வழி தெரியாமல் செல்ல, முருகனே சிறுவன் வடிவில் வந்து வழிகாட்டி அழைத்து வந்து தரிசனம் கொடுத்த தலம். முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்.

திருவிழா:

வைகாசி 11ம்நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் சேர்ந்த சுப்பிரமணியருக்கும், ஐப்பசி கந்த சஷ்டியில் தேவசேனாவுடன் முருகனுக்கும் திருமணம் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோயிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள். வைகாசி விசாகப் பெருவிழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும்.

வேண்டுகோள்:

நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *