அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம்

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம் – 641 606 திருப்பூர் மாவட்டம்.

+91- 421-220 3926, 224 0412.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:அங்காளம்மன்

தல விருட்சம்: வேம்பு

பழமை:500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்:முத்தனம் பாளையம்

மாவட்டம்: திருப்பூர்

மாநிலம்: தமிழ்நாடு

சுமார் 800 வருடங்களுக்கு முன் இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்குத் தானாக பால் சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும். இதனால் அது ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார். அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் பசுவானது சுயம்புவுக்குத் தானாக பால் சுரப்பதை நேரில் கண்டார்.


அதே போல் அன்று இரவே வேறு ஒரு பக்தரின் கனவில் அங்காளம்மன் தோன்றி,””எனது பக்தர்கள் இங்கிருந்து மேல்மலையனூர் வந்து என்னைக் காண நீண்ட தூரம் பயணம் செய்து, பல சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே கொங்கு மண்டலமான இப்பகுதியில் பசு பால் சுரந்த இடத்தில் சுயம்புவாக புற்று வடிவில் எழுந்தருளியுள்ளேன்,” எனக் கூறினாள்

அங்காளம்மனின் அவாதாரத் தலமான மேல்மலையனூரில் அம்மனுக்கு முன்புறம் பிரம்மாண்டமான புற்று அமைந்துள்ளது. அதே போல் இத்தலத்தில் கருவறையில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்புவாகப் புற்று அமைந்துள்ளது.

அங்காளம்மன் பெயர்க்காரணம்:

அங்காளம்என்ற சொல்லுக்கு இணைதல்என்று பொருள். இணைதல் என்பதை இருவகைகளில் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் இரண்டு வரங்கள் பெற்றான்.

அவையாவன:

ஒன்று, ஏழு பிறவி எடுத்து முடித்த ஒருவரால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும். இரண்டாவதாக, எந்த ஆயுதமும் தன்னை கொல்லக்கூடாது.

இதனால் தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தினான். அது மட்டுமல்ல. வரம் தந்த சிவனையே மறந்து விட்டான். தேவர்களைத் துன்புறுத்தினான்.
இத்தனை வரங்கள் பெற்றிருந்தாலும் ஒரே ஒரு வரம் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அது தான் குழந்தை வரம். 108 பெண்களை மணந்தும் பலனில்லை.

குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டுத் திரிந்தான். சிவன், வல்லாள கண்டனின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ முதல் பிறவியில் மீனாட்சியாகவும், அடுத்த பிறவியில் காமாட்சியாகவும், மூன்றாவது பிறவியில் விசாலாட்சியாகவும், நான்காவது பிறவியில் காந்திமதியாகவும், ஐந்தாம் பிறவியில் மாரியம்மனாகவும், ஆறாவது பிறவியில் காளியாகவும் உருவெடுக்க வேண்டும். ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன் படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள்.

காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். ஆனால், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். அதன் காரணமாக வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள். அவளது அங்கம் வெந்தது. இப்போதும் யாராவது இறந்து விட்டால், “அங்கம் கரைத்தாயிற்றா?’ எனக் கேட்பது உண்டு. அங்கம் என்றால் சாம்பல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கமாகிய சாம்பலிலிருந்து அவள் பிறந்ததால் அங்காளம்மன்எனப்பட்டாள். இறந்த உடலை ஒன்றிணைத்து பிறந்தவளே அங்காளம்மன்.

பக்தர்கள் இறைவனுடன் மனம் ஒன்ற வேண்டும். அவருடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலும் தேவிக்கு அங்காளம்மன்என்ற பெயர் ஏற்பட்டது.

அங்காளம்மனின் அற்புதங்கள் : மருதுரையான் வலசு என்ற ஊரைச்சேர்ந்தவர் கமலக்கிரி புலவர். அவர் நோய்வாய்ப்பட்டு அங்காளம்மன் கோயிலுக்கு வந்து நோய் நீங்கப்பெற்றார். அம்மன் மீது பாமாலை தொடுத்தார்.
இந்தப்பாடலை நோயுற்ற அனைவருமே பாடலாம். மிகவும் உருக்கத்துடன் அங்காளம்மனை நினைத்து பாடினால் தீராத நோயும் தீரும்என்பது நம்பிக்கை.

அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையின் பொன்னடியில் சரணடையக் குவிகிறார்கள். இந்நாளில் வெற்றிலை பாக்கு பிடித்தல், முகம் எடுத்து ஆடுதல், மயான ருத்ரி பூஜை நடத்துதல், மாப்பிள்ளை அழைப்பு, நந்தி தேவன் அழைப்பு, அலகு தரிசனம், ஆகிய சடங்குகள் நடத்தப்படும்.

வெற்றிலை பிடித்தல் என்ற சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்றும் பெயர். பார்வதி தேவியான இளவரசிக்கும், கைலாய மலையின் பேரரசர் சிவபெருமானுக்கும் நிச்சயதார்த்த விழா நடத்தப்படுகிறது. இதன்பிறகு மூன்று முறங்களில் பச்சை மாவால் செய்யப்பட்ட வல்லாள கண்டனின் கோட்டை காவலாளிகளான காளி, கூளி, திமிறி ஆகிய தெய்வங்களின் முகங்களை அமைப்பார்கள். அதை எடுத்து ஆடுவார்கள். வல்லாள கண்டனிடம் அங்காளம்மன் போர் புரிந்த போது நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வல்லாள கண்டனின் படைகளை எதிர்த்து அம்மனும் அவளது படைகளும் போர் செய்ததை நினைவு படுத்தும் வகையில், அம்மனை பல்லக்கில் வைத்து வீரத்துடன் விளையாடுவார்கள். இந்நிகழ்ச்சிக்கு அம்மனை பல்லக்கில் வைத்து ஆடுதல்எனப்பெயர்.

சிவராத்திரியன்று இரவில் மயானருத்ரிபூஜை நடத்தப்படும். வல்லாள கண்டனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி இது. மண்ணால் செய்யப்பட்ட ருத்ரியின் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். அங்காளம்மனின் மற்றொரு பெயர் காளராத்திரி‘. வல்லாளனை அழிக்கும் முன்பு மூன்றாம் ஜாமத்தில் அம்பாள் சிவபூஜை செய்தாள். அதை நினைவு படுத்தும் விதத்தில் மயான ருத்ரி பூஜை நடத்தப்படுகிறது.

இந்த பூஜைக்கு பிறகு அம்மன் வெற்றிக்கோலத்தில் திகழ்வார். பூசாரிகள் குளித்து விட்டு சிவபெருமானைத் திருமணத்திற்கு அழைத்து வருவார்கள். இது மாப்பிள்ளை அழைப்பு எனப்படும்.
பின்னர் நந்தி தேவரை திருமணத்திற்கு அழைக்கும் சடங்கு நடக்கும். தம்பதி சமேதராக பக்த கோடிகளுக்கு சிவனும் பார்வதியும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியை அலகு தரிசனம் என்பர்.

கோயிலின் முன்பு சுமார் 30 அடி உயரமுள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட கொடிமரம் உள்ளது. அதையடுத்து 3 நிலை ராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் தல விருட்சம் வேம்பு. கோயிலின் வடக்கே மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட தெப்பக்குளம் உள்ளது. கோயிலின் சுற்றுப்பகுதியில் விநாயகர், முருகன், பேச்சியம்மன், கருப்பணசுவாமி, பாவாடைராயன், காத்தவராயன், இருளப்பன், அகோரவீரபத்திரர், பேமசிரி, நாகர், புரவையம்மன், கவுண்டச்சி அம்மன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்தில் சொக்க விநாயகர், வலம்புரி விநாயகர், சித்தி விநாயகர், முத்து விநாயகர், கம்பத்து விநாயகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கோயில் முன்பு அரசமரத்தடியில் உள்ளவர் சொக்கவிநாயகர். சொக்கவிநாயகரின் அருகில் வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். கோயில் மண்டபத்தின் வலப்பக்கம் சித்தி விநாயகர் உள்ளார். அங்காளம்மன் கோயில் முன்புள்ள விளக்குத்தூணில் கிழக்கு நோக்கியிருக்கும் விநாயகர் ஆவார்.

ஆரம்ப காலத்தில் பாண்டிய மன்னர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1265-1300) கோயில் கட்டப்பட்டது. இதன் அடையாளமாக பாண்டியர்களின் மீன் சின்னங்கள் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.

மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கும். வருடந்தோறும் பெருமனை மாடகுலத்தார் புரட்டாசியில் அம்பு சேர்வை பூசையும், ஓதாளகுலத்தார்கள் கோயில் முன் கார்த்திகை தீபம் ஏற்றும் பூஜையும் செய்து வருகிறார்கள். மாசி சிவன் ராத்திரி உற்சவம் மிகப்பெரிய அளவில் பல விசேட நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேட நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தைச் செல்வம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோடம் உள்ளவர்களும் அங்காளம்மனை மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும்.

பஞ்ச விநாயகர்களையும் தரிசனம் செய்தால் துன்பங்கள் பஞ்சாய் பறக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தையில்லாத பெண்கள் இந்த கணபதியை வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது கமலகிரிப்புலவரின் அருள் வாக்காகும்.

அங்காளம்மனை குல தெய்வமாக வழிபடுவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துச்சாமி என பெயர் சூட்டுகிறார்கள். அம்மனின் அருளால் குழந்தைச் செல்வம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடிக் காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *