அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 44- 2744 6226, 90031 27288 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கந்தசுவாமி

அம்மன்

புண்ணியகாரணியம்மன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

தாருகாபுரி, சமராபுரி

ஊர்

திருப்போரூர்

மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமிஎன்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர். கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் இயந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த இயந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த இயந்திரத்திற்குப் பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த இயந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்கத் தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்வதுண்டு.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சமாக வழிபடுவர். பிரணவ மந்திரப் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையிலடைத்தபோது, முருகனே படைப்புத்தொழில் செய்தார். இதனால் இவரை பிரம்மாவின் அம்சமாகவும் வழிபடுவதுண்டு. திருச்செந்தூர் போன்ற தலங்களில் விழாக்காலங்களில் சுவாமி, மும்மூர்த்திகளின் அலங்காரத்தில் எழுந்தருளுவார். இங்கு கந்தசுவாமி, மும்மூர்த்திகளின் அம்சமாகக் காட்சி தருகிறார். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை இவரிடம் உள்ளது. சிவனைப்போல வலது கையை ஆசிர்வதித்தபடி அபயஹஸ்த நிலையிலும், பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலையிலும் காட்சி தருகிறார்.

கந்தசுவாமி இத்தலத்தில் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தியாக அருளுகிறார். கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது. முன்பு, முருகன் சிலை மட்டும் இருந்தது. பின்னர் வள்ளி, தெய்வானையை பிரதிஷ்டை செய்தனர். முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்துகின்றனர்.

சிவன் கோயில்களிலுள்ள அம்பாளுக்கும், பெருமாள் கோயில்களில் தாயாருக்கும் தான் நவராத்திரி விழா நடத்துவது வழக்கம். ஆனால், இங்கு அவளது மருமகள்களான வள்ளி தெய்வானைக்கு நவராத்திரி நடத்துகின்றனர். இந்நாட்களில் வள்ளி, தெய்வானைக்கு ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படும். சிவனைப்போல இங்கு ஐப்பசி பவுர்ணமியில் முருகனுக்கு அன்னாபிஷேகமும், சிவராத்திரியன்று இரவிலும் நான்கு கால பூஜையும் நடக்கிறது. இங்குள்ள அம்பிகை புண்ணியகாரணியம்மன் எனப்படுகிறாள்.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அவர் கந்தசுவாமியை, சகல வேதங்களின் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாமிக்கு வேத உச்சியாக சுவாமிஎன்றும் பெயருண்டு. அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருப்பவர் என்பது இதன்பொருள். கல்வியில் சிறக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோத்சவத்தின்போது, முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும். முருகன், வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சிலையும் இங்குள்ளது. இவ்வேளையில் மகாவிஷ்ணு, விநாயகர், நந்தி, பிரம்மா, இந்திரன் ஆகியோரும் உடனிருப்பர். இவ்விழாவின் மூன்றாம் நாளில் முருகன், ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடாவார். கையில் வில்லேந்தி, மயில்மேல் காலை வைத்தபடி சம்கார முத்துக்குமார சுவாமிக்கும் இங்கு சிலை உள்ளது. கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சன்னதி உள்ளது. பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்கக் காரணமாக இருப்பதால் இவருக்கான அம்பிகைக்கு புண்ணியகாரணியம்மன் என்று பெயர். வழக்கமான சுவாமி விமானத்தின் மேலே ஒரு கலசம்தான் இருக்கும். இவளது சன்னதி விமானம், ஐந்து கலசங்களுடன் இருக்கிறது. கேதார கவுரி நோன்பன்று (தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதம்) இவளது சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும். இச்சமயத்தில், பெண்கள் சுமங்கலி பாக்கியத்திற்காக இவளுக்கு அதிரசம் படைத்து வேண்டிக்கொள்வர்.

பிரளயத்தால் ஆறு முறை அழிவைச்சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்ட கோயிலே தற்போது இருக்கிறது. ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில், சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால், முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது. கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது. சுவாமிமலை, திருத்தணி தலங்களைப்போலவே இங்கும் சுவாமி எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது. வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில், பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. வைகாசி விசாகத்தன்று சுவாமிக்கு திருப்பாவாடை வைபவமும், தைப்பூசத்தை ஒட்டி சுவாமிக்கு தெப்பத்திருவிழாவும் விசேஷமாக நடக்கும்.

திருவிழா:

கந்தசஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம்.

வேண்டுகோள்:

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள யந்திர முருகனை வழிபடுகின்றனர். மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்குள்ள சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை செய்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *