அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம்

அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம், சென்னை.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண கந்தசுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மடிப்பாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒருகால கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தை உருவாக்கினார். முதலில் விநாயகர் மட்டுமே இங்கு அருள்புரிந்து வந்தார். இதன் பிறகே முருகப்பெருமானுக்கு சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயில் கட்டினர். நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர். முருகனின் சரவணபவ எனும் ஷடாச்சர மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று முருகனை வழிபடுவது சிறப்பு.

பங்குனி உத்திரம், கார்த்திகை, கந்தசஷ்டி.

இங்குள்ள அங்காரகனுக்கு தில பத்ம தானம் (திலஎள், பத்மதாமரை மலர்) செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *