அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4633 – 267636 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர்)

உற்சவர்

முத்துக்குமாரர்

தலவிருட்சம்

பஞ்சவிருட்சம்

தீர்த்தம்

அனுமன் நதி

ஆகமம்

வைதீகம்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

ஆய்க்குடி

மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு சமயம் அக்குளத்தை மக்கள் தூர்வாறியபோது, அதனடியில் பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் அழகிய சுப்பிரமணியர் சிலை ஒன்று கிடைத்தது. அச்சிலையை எடுத்துக்கொண்ட பக்தர் ஒருவர் தமது வீட்டின் பின்புறத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்துவந்தார். ஒர்நாள் அவரது கனவில் தோன்றிய பாலசுப்பிரமணியர், அரசும், வேம்பும் இணைந்திருந்த இடத்தில் தன்னைப் பிரதிஷ்டை செய்து அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடும்படி கூறினார். சுப்பிரமணியர் கூறியதைப்போன்ற இடம் தனக்கு தெரியாது என அவர் கூறவே, அவரது தொழுவத்தில் இருக்கும் செம்மறி ஆடு சென்று நிற்கும் இடத்தில் தன்னை பிரதிஷ்டை செய்யும்படி கூறி அருளினார். அதன்படி, இவ்விடத்தில் ஆடு நிற்கவே சிறிய அளவில் பாலசுப்பிரமணியருக்கு ஆலயம் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சைவ, வைணவ ஒற்றுமை கருதி இராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வணங்க ஆரம்பித்தனர். எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியர் ஹரிராமசுப்பிரமணியர்என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள நதிக்கு அனுமன் நதிஎன பெயரிடப்பட்டது.
மூலவர் பாலசுப்பிரமணியர், இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, கணபதி ஆகிய பஞ்ச தேவதையர்கள் குடியிருக்கும் அரசு, வேம்பு, மாவிளக்கு, மாதுளை, கறிவேப்பிலை எனும் பஞ்சவிருட்சங்கள் இக்கோயிலில் உள்ளன. இங்கு இராமர் வந்து சென்றதாக கூறப்படுவதின் அடிப்படையில், மூலவருக்கு வைதீக ஆகமமுறையிலும், உற்சவருக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இங்குள்ள அனுமன் நதி கடுங்கோடையிலும் வற்றாத ஜீவநதியாக உள்ளது. இங்கு வந்து பாலசுப்பிரமணியரை வணங்கி வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறப் பெற்றவர்கள், பாயசத்தை நைவேத்யமாகப் படைத்து, அதனை அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி (படிப்பாயசம்) சிறுவர்களுக்கு கொடுக்கின்றனர். சிறுவர்களின் வடிவில் சுவாமியே நேரே வந்து பாயசத்தை பருகுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயில் முன்மண்டப தூண்களில் இராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோரது திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சித்திரை மாதப் பிறப்பு முதல் சில தினங்களுக்கு உதய சூரியனது கிரணங்கள் மூலவர் மீது விழுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

பாடியவர்:

அருணகிரிநாதர்

திருவிழா:

கந்தசஷ்டியின் போது 6 நாட்கள், சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், புரட்டாசியில் சிறப்பு அபிஷேகம், தை மாதத்தில் பாரிவேட்டை, தைப்பூசம் மற்றும் திருக்கார்த்திகை.

வேண்டுகோள்:

குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி, கேள்வி, ஞானம், சங்கீதத்தில் சிறக்க, நோய்கள், துன்பங்கள் நீங்கிட, ஆயுள் பலம் பெருக, கல்வி, அறிவு செல்வம் பெருக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

இங்கு பாலசுப்பிரமணியப் பெருமானிடம் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிட விசேஷ அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்து படிப்பாயசம் வைத்து, காவடி, பால்குடம் எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும், லட்சார்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன்கள் செலுத்தலாம். அன்னதானம் மற்றும் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும், வெள்ளியிலான சுவாமியின் உறுப்பு வடிவங்களை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *