அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்.

+91 98431 75993 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பாலமுருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

கஞ்சமலை

மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலைக் கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டித் தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப விமோசனம் அளித்தார். முருகனுக்கும், மயிலுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இப்பகுதியிலுள்ள பக்தர்கள், கஞ்சமலை அடிவாரத்திலுள்ள குன்றில் குழந்தை ரூபத்திலான முருகனுக்கு கோயில் எழுப்பினர். கோயில் அமைந்துள்ள குன்று கஞ்சமலைத் தொடரை சேர்ந்தது. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், உருத்திரன், காளாங்கி, கஞ்சமலையானோடு எழுவரும் என் வழியாமே, என்று திருமந்திரத்தில் பாடல் பெற்ற தலம் இது. மலையின் உயரத்தை அடிவாரத்தில் இருந்து பார்த்தால், இதில் ஏறிவிட முடியுமா என மலைப்பாகத் தோன்றும். ஆனால், 250 அடி உயரமே உள்ள இந்த மலையில், 101 படிக்கட்டுகளை கடந்தால் கோயிலை அடைந்து விடலாம். அதுமட்டுமல்ல. மலைக்கோயிலுக்கு நேரடியாக கார்களிலும் சென்று விடலாம்.

கஞ்சம் என்ற சொல்லுக்கு தங்கம், இரும்பு, தாமரை என்ற மூன்று பொருள்கள் உள்ளன. இம்மூன்று பொருள்களும் இம்மலைக்கு பொருந்தும். கஞ்சம் என்பதற்கு முதல் பொருள் பொன் என்பதாகும். பராந்தக சோழன் தில்லையம்பலத்தில் பொன் வேய்ந்தான் என்பது வரலாறு. சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடும் நடராஜப்பொருமானுக்குத் தங்க நிழல் தந்தது கஞ்சமலையில் உள்ள தங்கத்தைக் கொண்டே என்று சொல்கிறார்கள். கஞ்சமலையிலும், சுற்றுப்புறங்களிலும் இரும்புத்தாதும் மிகுந்துள்ளது. இம்மலைப் பாறைகளில் கருத்த இடங்கள் அதிகம் இருப்பதால் கருங்காடு என்ற பெயரும் உள்ளது. இக்கருங்காட்டில் விளையும் கருமை நிற மூலிகைகள் மற்ற மூலிகைகளை விட மருத்துவ குணம் மிக்கவை. கருமை படர்ந்த மூலிகைகளில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. கஞ்சன் என்பது பிரம்மாவையும் குறிக்கும். அவரால் உருவாக்கப்பட்ட மலை என்பதால் கஞ்சமலைஎன்று பெயர் வந்ததாக கரபுரநாதர் புராணம் கூறுகிறது.

கருவறையில் பாலமுருகன் குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 15வகை நோய்கள், மயக்கம், மனோவியாதியை நீக்கும் சக்தி படைத்த கருநெல்லி மரங்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தால் குழந்தைகளின் நீண்டகால நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

பாலமுருகன் சன்னதி எதிரில் நாரதர், பிரம்மா, விஷ்ணு, ஐயப்பன், நவக்கிரகங்கள், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் காணப்படுகின்றன.

திருவிழா:

கந்தசஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

வேண்டுகோள்:

குழந்தை வடிவில் பாலமுருகன் என்ற பெயரில் திகழும் இவர் குழந்தைகளின் நோய் தீர்ப்பவராகவும் உள்ளார். தங்கம், இரும்பு, பூ வியாபாரம் செழித்து விளங்க இங்குள்ள முருகனை வழிபடுகின்றனர்.

இங்கு எழுந்தருளியுள்ள முருகனை சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனம் அமைதியாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

சஷ்டி மற்றும் கிருத்திகை, பவுர்ணமி நாட்களில் பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமணத்தடை விலகல், இழந்த வருமானத்தை மீண்டும் பெறுவது ஆகிய பலன்களும் கிடைக்கிறது.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவுடன் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

One Response to அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை

  1. naveetha chidambaram says:

    sir,thank u for this upload.This post has got immense value and a message for a search on kanjamalai to me …..murugan thunai…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *