அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர்

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 480-281 2061 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்
அம்மன் உமையம்மை
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் சிவகங்கை
பழமை 2000 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் திருவஞ்சிக்குளம்
ஊர் திருவஞ்சிக்குளம்
மாவட்டம் திருச்சூர்
மாநிலம் கேரளா
பாடியவர் சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.

சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுந்தரர் தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலைஎன்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும்,”தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கேஎன்னும் பதிகம் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார்.

தேவாரப்பதிகம்:

தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.

திருவிழா:

மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது.

பிரார்த்தனை:

இங்கு மாலை வேளையில் நடத்தப்படும் தம்பதி பூஜை மிகவும் சிறப்பானது. இந்த பூஜை முடிந்தவுடன் பள்ளியறை பூஜை நடக்கும். இந்த பூஜையை பார்த்தால் குழந்தைபாக்கியம் கிட்டும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள், கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியன்று இந்த பூஜையைச் செய்வது சிறப்பு. இந்த பூஜைக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து,

வில்வ அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *