அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.
+91- 452-234 9868, 234 4360 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் | |
அம்மன் | – | மீனாட்சி, அங்கயற்கண்ணி | |
தல விருட்சம் | – | கடம்ப மரம் | |
தீர்த்தம் | – | பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம் | |
ஊர் | – | மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், திருநாவுக்கரசர் |
மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக “இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்” என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் “தடாதகை” எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.
மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் “கன்னிநாடு” எனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.
நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்குப் பக்கத்தில் தடாதகை இருந்ததை காணக் கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.
பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது. சோமசுந்தரர், சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர். பாண்டியன் கோலம்பூண்ட சுந்தரப் பெருமாள் மக்களுக்கு அரசனாகவும், பகைவர்களுக்கு சிங்கமாகவும், உலக இன்பங்களை வெறுத்த ஞானிகளுக்கு முழுமுதலாகவும் விளங்கினார்.
உலகப்புகழ் பெற்ற சிவாலயம். பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி. சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே. சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் மந்திரம் அமையக் காரணமான சிவத்தலம்.
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன. ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம். நக்கீரன், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம். முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,
திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில்தான். பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம். இராமர், இலட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம். திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம். எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.
கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது. அம்மையும் அப்பனும் வீதியில் வருவதும், அண்டிய அன்பருக்கு இன்பமே தருவதும் மதுரையில் காலம் காலமாக நடந்து வருவதாகும். தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன. நவக்கிரக ஸ்தலத்தில் புதன் ஸ்தலமாகும்.
14 கோபுரமும் 5 வாயிலும் உடைய மிகப்பெரிய கோயில். கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சிற்பவனப்பும், நாத அமைப்பும் கொண்டது. பல மூர்த்திகளின் திருவுருவங்களும், பொற்றாமரைக்குளமும், கோயில் விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் இத்தகோயில் விளங்குகிறது. தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது.
சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் “மதுரை” எனப் பெயர் பெற்றது.
சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் “ஆலவாய்” என்ற பெயர் வந்தது.
கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் “கடம்பவனம்” எனப் பெயர் பெற்றது.
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் “நான்மாடக்கூடல்” எனப் பெயர் ஏற்பட்டது.
இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் | திருவாசகம் |
அருணகிரிநாதர் | திருப்புகழ் |
பாணபத்திரர் | திருமுகப்பாசுரம் |
பரஞ்சோதி முனிவர் | திருவிளையாடற்புராணம் |
மாங்குடி மருதனார் | மதுரைக்காஞ்சி |
குமரகுருபர சுவாமிகள் | மீனாட்சி பிள்ளைத்தமிழ் |
இவை தவிர, கணக்கிலடங்கா புராண இதிகாச இலக்கியங்களில் இத்திருத்தலம் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.
மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல, தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.
அன்னை மீனாட்சிக்கு “பச்சைத்தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள்” போன்ற பெயர்களுடன் இன்னும் பல பெயர்களும் உள்ளன.
மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். அதில் பதஞ்சலி மகரிஷியும் வியாக்ரபாதரும் அடங்குவர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சிவனிடம், “இறைவா! நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்” என்றனர். இதைக்கேட்ட இறைவன், இவர்களின் நியமத்தை காக்கும்பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிக்க வெள்ளியம்பலத்தை ஏற்படுத்துகிறார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்டபின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்துகின்றனர்.
இந்த வெள்ளியம்பல நடராஜர் திருநடனம் புரியும் மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் 64ல் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். மீதி ஒரு கலை தான் நடனம். இந்த நடனமானது நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருப்பதால் நாம் எப்படி கற்பது என நினைத்தான். இதே காலத்தில் வாழ்ந்த கரிகாற்சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். உடனே பாண்டியனும் நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெறுகிறான். இப்படி நடனம் கற்கும் போது உடம்பெல்லாம் வலிப்பதால் நடனக்கலை எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்கிறான். 64 கலைகளையும் கற்ற திருப்தியில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் வாங்க வருகிறான். அப்போது நடனம் கற்பதே கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்படுகிறான். இதை யாரிடம், எப்படி கேட்பது. முன் காலங்களில் வாழ்ந்த தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி சிவனிடம் கேட்பது என நினைத்து மிகவும் வருத்தப்பட்டான். இந்நிலையில் ஒரு சிவராத்திரி திருவிழா வருகிறது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு, நடராஜரின் எதிரில் நின்று, “ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா! எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?” என வருந்திகேட்கிறான். “அப்படி நீ கால் மாறி ஆடா விட்டால் என் முன்னால் கத்தி வைத்து, அதில் விழுந்து உயிர் துறப்பேன்” என இறைவனிடம் கண் மூடி மன்றாடுகிறான். சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்க்கிறான் ராஜசேகர பாண்டியன். அப்படியே மெய்சிலிர்த்து நின்று விடுகிறான். காரணம், பக்தனுக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி ஆடுகிறார் நடராஜப்பெருமான். உடனே மன்னன்
“பெரியாய் சரணஞ் சிறியாய் சரணங்
கரியாகிய வங்கணனே சரண
மரியாயெனியா யடிமாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா சரணம்!
நதியாடிய செஞ் சடையாய் நகை வெண்
மதியாய் மதியா தவர் தம்மதியிற்
பதியாய் பதினென் கணமும் புரவுத்
துதி சரணஞ் சடரே சரணம்!
இப்படி பலவாறாக பாடித்துதித்து, மகிழ்ந்து ஆனந்தத்தில் அழுது விழுந்து தொழுது, “எனக்காக கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கவேண்டும்” என்ற வரமும் வாங்கி விடுகிறான். அன்றிலிருந்து தான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார். இந்நிகழ்ச்சி பரஞ்சோதி முனிவர் எழுதிய சிவனின் 64 திருவிளையாடலில் கூடற்காண்டத்தில் 24வது படலமாக “கால் மாறி ஆடிய படலம்” 6வது திருவிளையாடலாக வருகிறது.
மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில், உலக நாயகனான சோமசுந்தரக்கடவுள் சித்தர் வடிவம் எடுத்து மதுரையின் எல்லாப்பகுதியையும் சுற்றி வருகிறார். அப்போது அவர் கிழவனைக் குமரனாக்கியும், ஆணைப் பெண்ணாக்கியும், இரும்பை தங்கமாக்கியும், முடவனை நடக்கவைத்தும், ஊமையை பேசவைத்தும், ஊசியை நிறுத்தி அதன் மேல் கால் பெருவிரலால் ஆடியும் பல சித்து விளையாட்டுக்களைச் செய்து காட்டி மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த செய்தியை கேள்விப்பட்ட அபிஷேகப் பாண்டியன் இவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினான். வந்தவர்களும் இவரது சித்து விளையாட்டை பார்த்து பிரமித்துப்போய் விடுகின்றனர். அழைக்கச்சென்றவர்கள் வராமல் போகவே, தன் அமைச்சரை அனுப்பி சித்தரை அழைக்க அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனால் எனக்கென்ன பயன், என்னைப்பார்க்க வேண்டுமானால் அரசனை வரச்சொல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறார். மன்னர் தன்னைப்பார்க்க வருவதை அறிந்த சித்தர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வாயு மூலையில் யோக நிஷ்டையில் அமர்ந்து கொள்கிறார். (இவர் அமர்ந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னதிக்கு அருகில் உள்ளது) அரசனுடன் வந்த ஆட்களால் சித்தரின் நிஷ்டையை கலைக்க முடியவில்லை. கலைக்க சென்றவர்களில் கைகள் தூக்கிய நிலையிலேயே நின்றுவிட்டது. அதிர்ந்து போனான் அரசன். சித்தரிடம் பணிவுடன், “சித்தர் பெருமானே தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி? தங்களுக்கு ஏதாவது தேவையென்றால் கேளுங்கள். அத்துடன் தாங்கள் உண்மையிலேயே சித்தர் தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது” என்று கூறினான். சித்தர் உருவிலிருந்த சோமசுந்தரர், நிஷ்டையிலிருந்து கண்விழித்து,”அரசனே. நான் தான் அனைத்தும்; நானே ஆதியும் அந்தமும்; நான் எங்கும் சஞ்சரிப்பவன்; தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டை காட்டி அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதையெல்லாம் கொடுக்கும் என் பெயர் ‘எல்லாம் வல்ல சித்தர்‘” என்றார். ஆனாலும் நம்பிக்கையில்லாத அரசன், “தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல்யானையை தின்னச் செய்யுங்கள்” என்றான். சித்தரும் அமைதியுடன் அருகிலிருந்த கல் யானையை பார்த்து கண் அசைக்க யானை சடாரென அரசனிடமிருந்த கரும்பைத்தின்றது.
அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. பதறிய சேவகர்கள் சித்தரை அடிக்கவந்தனர். சித்தரின் சைகையால் அடிக்க வந்தவர்கள் சித்திரம்போல் ஆனார்கள். உண்மை நிலையறிந்த அரசன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி, எம்பெருமானே அறியாமல் செய்த பிழையை பொறுத்து, மன்னித்தருள வேண்டும். சித்தரும் மன்னித்து, “நான் இங்கேயே வீற்றிருந்து மக்களுக்கு வேண்டியதை வழங்குகிறேன், அத்துடன் உனக்கு தேவையானதை கேள்” என்றார். “இறைவா எனக்கு புத்திர பாக்கியம் தந்தருள வேண்டும்” என்றான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால் அரசனுக்கு விக்கரமன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. இப்படி இறைவனே எல்லாம் வல்ல சித்தராக (இவரை சுந்தரானந்தர் என்றும் அழைப்பர்) அவதரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து என்ன வேண்டினாலும் வாரி வழங்கி கொண்டிருக்கிறார். தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் அமைத்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.
மதுரையில் சிவனுக்கு திருத்தொண்டு புரிந்து வரும் வணிகர்குலத்தில் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர்தான் மூர்த்தி நாயனார்.
இவர் இத்தலத்தில் தினமும் சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது கடமையாகக் கொண்டிருந்தார். வீரம் விளையாடும் மதுரையில் கோழையொருவன் ஆட்சி செய்து வந்தான். இதுதான் சமயம் என்று பகையரசனான கர்நாடக மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியனை முறியடித்து மதுரையை தனக்குத் தலைநகராகவும் கொண்டான். பகையரசன் சமண சமயத்தைச் சார்ந்தவன். சமண மதமே சிறந்தது என்று நினைத்து சைவ அடியார்களுக்கு சிரமங்களை கொடுத்ததுடன் தன் நாட்டிலிருந்து சமண பிரச்சாரர்களையும், குருமார்களையும் வரவழைத்து சமண மதத்தை பரப்பினான். சைவத்தை வளர விடாமலும் சிவ ஆலயங்களுக்கு திருப்பணி செய்யவிடாமலும் தடுத்தான். இந்நிலையில் சொக்கநாதருக்குச் சந்தனம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்து அவரது திருப்பணியைத் தடுக்க முயற்சித்தான். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இறைவனுக்குத் தாம் செய்யும் திருத்தொண்டினை மட்டும் தவறாமல் செய்து கொண்டே வந்தார்.
ஒருநாள் சந்தனக் கட்டைக்காகப் பகலெல்லாம் மதுரை முழுவதும் சுற்றி அலைந்து தேடியும் கிடைக்காமல் இறுதியில் வேதனையோடு கோயிலுக்குள் வந்தார். சிவநாமத்தை துதிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு ஒரு எண்ணம் பிறந்தது. “சந்தனக் கட்டைக்குப்பதிலாக தன் முழங்கையை அரைக்கலாம்” என்று நினைத்து சிவனை தியானித்துக்கொண்டே கல்லில் தமது முழங்கையை வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். தோல் தேய்ந்தது. ரத்தம் பீறிட்டது! எலும்பும் நரம்பும் நைந்து வெளிப்பட்டன. மூர்த்தி நாயனார் எதைப்பற்றியும் எண்ணாமல் வேதனையையும் பொருட்படுத்தாமல் அரைத்துக் கொண்டேயிருந்தார். சிவபெறுமான் பக்தனின் பரமசேவையைக் மகிழ்ந்து பக்திக்கு அடிமையானார். அதற்கு மேல் தொண்டரைச் சோதிக்க விரும்பவில்லை. “அன்பும் பக்தியும் மேலிட எமக்குச் செய்த திருத்தொண்டு முன்போல தடையின்றி நடைபெறும். கர்நாடக மன்னனை வென்று அரசு பெற்றுப் புகழ்பெறுவாய்! இறுதியில் எமது திருவடி சேர்வாயாக” என்று அருள்வாக்கு கூறினார். உடனே அவரது கைபழைய நிலைமைக்கு வந்தது. கர்நாடக மன்னனின் ஆயுளும் அன்றோடு முடிவுற்றது. சமணரின் ஆதிக்கமும் அழிந்தது. முன்போல சைவம் தழைத்தது. மன்னனுக்கு வாரிசு இல்லாததாலும், அரசு மரபினர் யாரும் இல்லாததாலும் நாட்டை ஆள வழக்கப்படி யானையிடம் மாலை கொடுத்து யானை யார் கழுத்தில் மாலை போடுகிறதோ அவரே மன்னர் என அமைச்சர்கள் தீர்மானித்தனர்.
யானையும் மாலையோடு சென்று சிவனை வழிபட்டுக் கொண்டிருந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் போட்டது. அமைச்சர்களும் மூர்த்தி நாயனாரையே மன்னனாக அழைத்தனர். ஆனால் அவரோ எனக்கு பொன்முடி, மணிமாலை தேவையில்லை, அதற்குப்பதில் உத்திராட்சமும் சடைமுடியும் விபூதிப்பட்டையுடனும் அரசாள்வேன் என்று கூறி கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு இறைவன் விருப்பப்படி நாட்டை ஆண்டார். இவரது ஆட்சியில் மக்கள் வாழ்வு மலர்ந்தது. இந்த பூமியில் புகழ்பெற்ற நாயனார் நீண்ட நாள் ஆட்சி செய்து பின் சிவனின் திருவடியை சேர்ந்தார்.
கோயிலுக்குள் உள்ள சிலைகளும், பொற்றாமரைக்குளமும், விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. மூர்த்திகளின் உருவங்களும் பேசாத பேச்சில் பேசும், சில தூண்களும் சிலைகளும் இசை பாடும். இலக்கியப் பாடல்களும், சுதைகளும், சித்திரங்களும் ஆங்காங்கு தீட்டப்பெற்றுள்ள திருவிளையாடல்களை நடித்துக்காட்டும். நாடகச் சிற்பங்களும் நடனச் சிலைகளும்
உள்ளன. எனவே முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் மதுரைக்கோயில் திகழ்கிறது.
வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் தூண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன. இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது.
இந்திரன் தான் பூஜிப்பதற்குப் பொன் தாமரை மலரைப் பெற்ற இடம். திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப்பலகை தோன்றிய தலம். ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி இக்குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
மதுரையில் கோயிலுக்கு வெளியில் நான்கு திசைகளிலும் நான்கு புகழ் பெற்ற ஆலயங்கள் உள்ளன. இவை நகருக்கு உள்ளே இருப்பதால் உள் ஆவரணம் எனப்படும். வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோயில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னைத்தான் அர்ச்சித்த மூர்த்தியாக வழிபட்ட இம்மையில் நன்மை தருவார் கோயில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லுர் முக்தீசுவரர் கோயில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய்க் கோயில் ஆகியவை நகருக்கு உள்ளே அமைந்த உள்ஆவரணக்கோயில்களாகும்.
மதுரைத்தலத்திற்கு வெளியில் உள்ள நான்கு திருத்தலங்கள் வெளி ஆவரணம் எனப்படும். மதுரைக்குத் தெற்கில் திருப்பரங்குன்றமும் மேற்கில் திருவேடகமும் வடக்கில் திருவாப்பனூரும் கிழக்கில் திருப்புவனமும் உள்ளன. இவை வெளி ஆவரணமாகும்.
சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபடப் பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. இந்த சக்தி பீடத்திற்கு ராஜமாதங்கி சியாமள பீடம் என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது. 18 சித்தர்களில் சுந்தரானந்தர் அடங்கிய தலங்களுள் ஒன்று. தமிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், தலத்தின் பெயரை படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என்றும் கூறுவர். மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார்.
நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி சிவன் தமது சூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே இந்தக் குளம். கோயிலுக்குரிய தீர்த்தங்களில் முதன்மையானது. சிவகங்கை என்றும் பெயர். இந்திரன் தான் பூஜிப்பதற்கு பொன் தாமரையைப் பெற்ற இடம். இந்தக்குளத்தில் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணகாலம், வியதிபாதம் ஆகிய புண்ணிய காலங்களில் நீராடி இறைவனைப் பூஜித்தால், வேண்டும் சித்திகளைப் பெறலாம் என்பது ஐதீகம். இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலை நாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம்.
தேவாரப்பதிகம்:
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
– திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுதலங்களில் இது முதலாவது தலம்.
திருவிழா:
சித்திரை மாதம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் போது மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேர் ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை. நவராத்திரி, ஆவணி மூல திருவிழா, தை மாதத்தில் தெப்பத் திருவிழா, ஆடிப்பூரம். இது தவிர மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணமாக இருக்கும். இவை தவிர பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், விநாயகர் சதுர்த்தி ஆகிய முக்கிய விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
பிரார்த்தனை:
இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.
வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர். தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது. இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலம். அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்துதல், சுவாமிக்கு உலர்ந்த தூய ஆடை அணிவித்தல், தங்களால் முடிந்த அபிஷேக ஆராதனைகள் இங்கு இறைவனுக்கும், அம்மனுக்கும் பக்தர்களால் செலுத்தப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றை செய்யலாம். தவிர யாகம் செய்தும் வழிபடலாம்.
இருப்பிடம் :
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும்,ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கி.மீ. தூரத்திலும் மீனாட்சி கோயில் உள்ளது.
Leave a Reply