அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கைச்சினநாதர்
அம்மன் பல்வளை நாயகி
தல விருட்சம் கொங்கு, இலவம்
தீர்த்தம் இந்திரதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கைச்சினம்
ஊர் கச்சனம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான்.

கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர். எனவே சேவலாக உருவெடுத்து ஆசிரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளதுஎன்று சொல்லி விட்டு, அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார்.

அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் இராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகக் கல்லாக மாற்றினார். சாப விமோசனம் பெறுவதற்காக, இந்திரன் சிவனை நினைத்து உருகி வழிபட்டான். சிவன் அவனிடம், விமோசனம் வேண்டுமானால், மணலால் இலிங்கம் செய்து அபிஷேகம் செய்து வழிபடும்படி சொன்னார்.

மண்ணில் செய்த இலிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? எனவே இந்திரன் இன்னும் பல காலம் துன்பப்பட்டான். செய்த தவறை நினைத்து உருகினான். கடும் குற்றம் செய்த அவனை சிவன் மன்னிக்கவில்லை. பின்னர் அம்பாளை நினைத்து தவமிருந்தான். இப்படியாக பல்லாண்டு கழித்தும் பலனின்றி, தான் அமைத்த இலிங்கத்தைக் கட்டிப்பிடித்து, “இனி பெண் வாசனையையே நுகர மாட்டேன்எனக் கதறினான். அவனது விரல்கள் இலிங்கத்தில் பதிந்து விட்டன. தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் கானக வாழ்வில் சிக்கிய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். அவன் எழுப்பிய இலிங்கத்தில் எழுந்தருளி, தவறு செய்யும் யாராயினும் தண்டனை கொடுத்தும், தவறை எண்ணி திருந்தி இனி தவறு செய்வதில்லை என உறுதி எடுப்போருக்கு அருள்பாலித்தும் வருகிறார். இந்திரனின் கைவிரல்கள் இலிங்கத்தில் பதிந்ததால், “கைச்சின்னேஸ்வரர்எனப்படும் இவர், பல்வளை நாயகி அம்பிகையுடன் இத்தலத்தில் உள்ளார்.

மனிதன் வீரமும் ஆற்றலும் உடையவனாகவோ, படித்துவிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரசுவதியை முதலிலும், அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள்.

சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலா னங்கை யனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 122வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

பிரார்த்தனை:

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

இருப்பிடம் :

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தொலைவில் கச்சனம் கிராமம் இருக்கிறது. சாலையோரம் கோயில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *